முனியாண்டி குசும்புக்காரேண்டா…!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்களுள் சுமார் 150இற்கும் மேற்பட்டவர்கள் கடந்தவருடம் செப்டம்பர் இறுதியில் மூச்சுத்திணறலால் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

இச்சம்பவத்தையடுத்து நோர்வூட் பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டதுடன், அச்சமும், பீதியும் மக்களை சூழ்ந்துகொண்டன. உணவு விஷமானதால்தான் அதை உட்கொண்டவர்கள் மயக்கமடைந்தனர் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

எனினும், 250 பேர்வரை மாத்திரமே வேலைசெய்யக்கூடிய இடத்தில் கோழிகளை அடைப்பதுபோல் 800இற்கும் மேற்பட்டவர்கள் சேவைக்கு இருத்தப்பட்டதாலேயே உரிய காற்றோட்டம் உள் வராததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏன், திடீரென இப்படியொரு சம்பவம் ஏற்பட்டது என மாறுபட்ட கோணத்திலும் தகவல்கள் வெளிவந்தன. அந்தவரிசையில் தெய்வகுற்றம் காரணமாகவே இது நடந்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட ஊழியர்களுள் சிலர் கருத்துவெளியிட்டிருந்தனர்.

ஆம். மேற்படி தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலிருந்து சற்றுத்தொலைவில் காவல்தெய்வமான முனியாண்டிக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த காலங்களில் வருடாவருடம் முனியாண்டிக்கு பலிகொடுக்கும் வேள்வி பூஜை நடத்திவந்துள்ளனர்.

ஆடு, கோழி வெட்டி திருவிழாபோல் குறித்த நிகழ்வு நடைபெறுமாம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாகவே முனியாண்டிக்கு வேள்விபூஜை நடத்தவில்லையாம்.
இதனால், முனியாண்டி சீற்றமடைந்ததாலேயே இந்த விபரீத நிலை ஏற்பட்டதாகவும் நம்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சிலர் கருத்துகளையும் முன்வைத்திருந்தனர்.

 

இதை நம்புவதா அல்லது இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஆனால், இந்தமுறை எப்படியாவது முனியாண்டிக்கு பூஜை நடத்த வேண்டும் என்பதில் பிரதேச மக்கள் குறியாக இருக்கின்றனராம்.

எது எப்படியோ முனியாண்டி குசும்புக்காரேண்டா…வருசா…வருசம் ஆடுகறி கேக்குறான் என மேற்படி தகவலை கேள்விப்பட்டவர்கள் நகைச்சுவையாக பேசுவதையும் கேட்கக்கூடியதாக உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *