யாழில் ஆவா குழுவை ஒழிக்க களமிறங்குகின்றது இராணுவம்!

ஆவா குழு உட்பட வடக்கில் இயங்கும் வன்முறைக்குழுக்களை முற்றாக ஒழிப்பதற்கு இராணுவத்துக்குத் தேவையான பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

வடக்கில் செயற்படும் வன்முறைக்குழுக்களை ஒழிப்பதற்கு இராணுவத்தினருக்கு – குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கேனும் பொலிஸ் அதிகாரங்களை அரசு வழங்கவேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் மகேஸ் சேனாநாயக்க நேற்றுமுன்தினம் கண்டியில் வைத்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அஜித் பி.பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவத்தளபதியின் கோரிக்கை நியாயமானது. இதற்கு முன்னரும் இராணுவத்தின் கோரிக்கையின் பிரகாரம் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது விடயத்திலும் விசேட அதிகாரங்கள் தேவைப்பட்டால் அதனையும் அரசு வழங்க தயாராகவே இருக்கின்றது.

நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். அதைச் செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ள பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் தேவையான உதவிகளையும், ஒத்ழைப்புகளையும் வழங்குவது அரசின் கடப்பாடாகும்” – என்றார்.

அதேவேளை, ஆவா குழுவை ஒடுக்குவதற்கு இராணுவத்தினர் கோரும் அதிகாரங்களை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *