பத்து அரசியல் கைதிகளினதும் உண்ணாவிரதப் போர் தீவிரம்! – மருத்துவத்தையும் புறக்கணிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும் நேற்றிலிருந்து மருத்துவத்தையும் புறக்கணித்துள்ளனர். அவர்களின் உடல்நிலை ஏற்கனவே மோசமாகவுள்ள நிலையில், மருத்துவ வசதிகளையும் புறக்கணித்து போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.

9 ஆண்டு காலமாக சிறைச்சாலைக்குள் வாடும் தம்மை குறுகியகால மறுவாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபட்டனர். மகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்குக்காக அநுராதபுரம் கொண்டு வரப்பட்ட 2 கைதிகளும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

முன்னரும் பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தமையினால் அவர்களது உடல் நிலை மிகப் பலவீனமான இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளுக்கு சேலைனும், மருத்துவமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றுக் காலையிலிருந்து மருத்துவ உதவிகளையும், சேலைனையும் பெற்றுக் கொள்வதையும் அவர்கள் தவிர்த்துள்ளனர். அவர்களது உடல் நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *