கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு ரூ. 75 இலட்சம்! – கொலைச் சதியையடுத்து அரசு தகவல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு அரசு சுமார் 35 இலட்சம் ரூபாவை செலவிடுகின்றது என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’ குறித்தும், அதனுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை குறித்தும் இதன்போது அவர் கருத்து வெளியிட்டார்.

“கொலை சூழ்ச்சி குறித்து சட்டம், ஒழுங்கு அமைச்சு மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது. பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவில்லை என பொது எதிரணி குற்றஞ்சாட்டுகின்றது. இப்பணியை சி.ஐ.டியினர்தான் செய்யவேண்டும் என்பதை அவ்வணி முதலில் புரிந்துகொள்ளவேண்டும். உரிய நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.

பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஸ்னைபர் ரக துப்பாக்கி காணாமல்போயுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த வகையான துப்பாக்கிகள் அப்படியே இருக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரின் திடீர் சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்ட துப்பாக்கியொன்று உரிய வகையில் கையளிக்கப்பட்டிருக்காவிட்டால் அது குறித்தும் ரி.ஐ.டியினர் விசாரணை நடத்துவார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் என 70 பேர் பாதுகாப்புக்காக களமிறங்கியுள்ளனர். விசேட வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு சுமார் 75 இலட்சம் ரூபா செலவாகின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *