வடக்கு மாகாண சபையைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையிலும் மோசடிகள்!

சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பட்டியல் யாழ்ப்பாணம் மாநகர சபை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஆராய்ந்த மேயர் அனைத்துக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 6ஆவது அமர்வு மேயர் இ.ஆனோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதிலேயே இந்தப் பட்டியலை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் தலைவர் ராஜீவ்காந்தால் சமர்ப்பிக்கப்பட்டது. பட்டியலைச் சமர்ப்பித்த அவர் தொடர் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்குமாறும் வலியுறுத்தினார்.

முறையற்ற ஆளணி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்டவிரோத இறைச்சி விற்பனை, முறையற்ற களஞ்சியப் பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டன.

நல்லூர் ஆலய திருவிழாக் காலங்களுக்காக சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளர்கள் 40 பேர் மாநகர சபையில் உள்ள தொழிலாளர் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் 12 பேரிடம் சிறு தொகை பணம் பெறப்பட்டே அந்தச் சங்கத்தால் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்தப் 12 பேரிடமும் மாநகர சபையின் தொழிற் சங்கம் பகுதி பகுதியாக 42 ஆயிரம் ரூபாவை நியமனம் பெற்றுக் கொடுத்தமைக்காக இலஞ்சமாக பெற்றுள்ளனர். அந்த 12 பேரும் மாநகர பிரதி மேஜர் ஈசன் முன்னிலையில் இதை எழுத்து மூலமாக இலஞ்ச ஊழல் குழுவிடம் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுள்ளனர்
.
மாநகர சபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவுக்கும் அதிகமாக 12 உழவு இயந்திர கண்டாவளை மண் மேலதிகமாகக் காணப்படுகின்றது. அங்குள்ள இருப்பு குழாய் (பொக்ஸ் பார்) களஞ்சிய இருப்பில் இருந்து 24 குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாரபட்சம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 132ஆவது அமர்வில், மாகாண சபைக்கு உட்பட்ட ஊழல் மோசடிகளை விசாரிக்க சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *