விட்டுகொடுக்க முன்வந்தேன்; ஆயினும் இனி அது நடவாது! – டெனீஸ் திட்டவட்டம்

“வடக்கு மாகாண அமைச்சர்கள் விடயத்தில் ஏற்பட்ட குழப்பங்களைப் பேசித் தீர்ப்பதற்குச் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாராகவே இருந்தேன். ஆனால், சமரச முயற்சிக்கு இறுதியாக இருந்த சந்தர்ப்பமும் தவறவிடப்பட்டுள்ள நிலையில் இனிமேல் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும்-சமரசத்துக்கும் இடமில்லை.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் .

வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர்கள் விவகாரம் குறித்து கடும் வாக்குவாதம் நடந்தது. இதன்போதே டெனீஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண அமைச்சராக இருந்த என்னை நீக்கியமை தவறு என்று நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. அதனையடுத்து அமைச்சர் விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இதனைத் தீர்ப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமையச் சில விட்டுக் கொடுப்புக்களையும் செய்வதற்கு நான் தயாராகவே இருந்தேன். ஆனால், அந்தச் சமரசமுயற்சிக்கு இறுதியாக இருந்த சந்தர்ப்பமும் தற்போது தவறவிடப்பட்டுள்ளது. ஆகையால் இனிமேல் எந்தவித சமரசத்துக்கும் – விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை.

குறிப்பாக அமைச்சர் விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதால் மாகாண சபையின் அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கியது முதல் நீதிமன்றம் அமைச்சராக அறிவித்த காலப் பகுதி வரையான எனது சம்பளத்தைக் கோரமாட்டேன் என்று கடந்த அமர்வில் தெரிவித்திருந்தேன். ஆனால், அதனை இப்போது மீளப் பெற்றுக் கொள்கிறேன்.

ஏனெனில் தற்போது அந்தச் சமரச முயற்சி தோல்வியடைந்திருக்கின்ற நிலையில் நீதிமன்றக் கட்டளைப்படி அல்லது சட்டப்படி எனக்கான சம்பளம் என்னிடம் வரும் என்றால் அதனை நான் கட்டாயம் பெறுவேன்.

அதனைப் பெற்று முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்குக் கொடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

இதேவேளை, அமைச்சராக இருந்த என்னை நீக்கியது தவறு என்ற போதிலும் அல்லது அமைச்சராக நீதிமன்றம் அறிவித்த பின்னரும் நான் எனது கடமைகளைப் பொறுப்பெடுக்க முன்வரவில்லை என்று உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அமைச்சர் என்பதால் அலுவலகங்களுக்குள் அடாவடித்தனமாகச் சென்று செயற்பட விரும்பவில்லை. எனது அமைச்சுப் பொறுப்பை எடுக்க முதலமைச்சரிடம் போகவேண்டும். அதற்கு என்னுடன் சிவாஜிலிங்கமும் வந்தால் நானும் அங்கு சென்று பொறுப்பை எடுப்பதற்குத் தயாராகவே இருக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *