வடமாகாண அமைச்சர்கள் சர்ச்சை: அதிகாரிகளை எச்சரித்தார் சீ.வீ.கே.

“வடக்கு மாகாண அமைச்சர்கள் சர்ச்சை முற்றுப்பெறாது இழுபடும் நிலையில், அமைச்சர்கள் விடயத்தில் அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்த மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், இந்த விடயத்தில் அதிகாரிகள் இழைக்கும் தவறுகளை எந்தவிதத்திலும் சபை பொறுப்பேற்காது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு அமைச்சர்கள் யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டு வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபை சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் சபை மாகாணசபைக்கு இருக்கவேண்டியது அவசியம். அந்தச் சபையானது முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் இணைந்ததாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்தச் சபைசயில் அமைச்சர் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தால் அமைச்சர்கள் யார் என்பது தொடர்பிலான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இங்கு ஏற்கனவே முதலமைச்சருடன் மேலும் நான்கு அமைச்சர்கள் இருக்கின்றபோதிலும் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னராக மேலும் ஒரு அமைச்சராக டெனீஸ்வரனும் இருக்கின்றார். ஆனாலும், சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவ்வாறு ஆறு பேர் இருக்கமுடியாது. ஆகையால் இந்தச் சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை தற்போது இல்லை. இத்தகைய அமைச்சர் சபையை இந்தச் சபையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் இருக்கின்ற அமைச்சர்கள் விவகாரம் குறித்து தற்போது நீதிமன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு இந்த விடயத்தில் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. அந்தத் தீர்ப்பையும் மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே, அத்தகைய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருக்கின்றபோது அந்தத் தீர்ப்பு குறித்து சபையோ, அதிகாரிகளோ, அமைச்சின் செயலாளர்களோ தங்களுக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனச் சொல்லமுடியாது. நீதிமன்றத் தீர்ப்பு அல்லது உத்தரவு என்பது வீடு வீடாகச் சென்று கொடுக்கமுடியாது. ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கமைய செயற்படவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

அந்தத் தீர்ப்பு குறித்து தமக்குத் தெரியாது என்றோ அல்லது அது குறித்து தமக்கு அறிவித்தல் வரவில்லை என்றோ யாரும் சொல்லமுடியாது. ஆகவே, இதனைக் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டியது அனைவரதும் கடப்பாடு ஆகும்.

எனவே, அமைச்சர்கள் விடத்தில் அதிகாரிகள் அவதானமாகச் செயற்படவேண்டும். இல்லையேல் பாரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அமைச்சர்கள் விடயத்தில் அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் கணக்காய்வுத் திணைக்களமே நடவடிக்கை எடுக்கும். இதற்குச் சபை பொறுப்பெடுக்காது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *