ஐ.நா. பொதுச் சபையில் மைத்திரி வாலைச் சுருட்டக் காரணம் என்ன?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.. “இலங்கை தமது பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண சர்வதேசம் உதவ வேண்டும். இறைமையுள்ள நாடு என்ற வகையில் வெளிச்சக்திகளின் தலையீடு அவசியம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இது புது கோரிக்கையல்ல. முன்னதாக இதையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் போருக்குப் பின் பதவி வகித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர்மார் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இப்படி பேசும் திட்டம் ஜனாதிபதியிடம் இருக்கவில்லை. முன்னதாக அமெரிக்கா புறப்பட ஒருவார காலத்துக்கு முன்னர் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரி , பொதுச் சபையில் விசேட பொறிமுறையொன்றை முன்வைக்கப் போவதாக சொல்லியிருந்தார். இந்த இணைப்பில் அதனை பார்க்கலாம். http://www.president.gov.lk/ta/ஐக்கிய-நாடுகள்-சபைக்கு-ப/

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சலுகைகளை பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் கெளரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல்” ஆகியன தொடர்பான விடயங்கள் அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருந்தார்..

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் , பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை போன்றே கடந்த யுத்த காலத்தில் இருதரப்பினரிடையேயும் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கு அதனூடாக வாய்ப்பு ஏற்படுமென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்..

இந்த முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி திட்டவட்டமாக சொல்லியிருந்தார் …

ஆனால் நடந்தது என்ன ?

ஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றினை முன்வைக்கப் போவதாக வெளிவந்த செய்திகளையடுத்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் உஷாரடைந்தன..

இந்த பொறிமுறையில் – போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரும்பாலான படையினரும் சில அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு ஒன்றின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் ஏது உள்ளதாக அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன..

இந்த பொறிமுறையின் கீழ் சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான படையினர் விடுவிப்பது என்பதை ஏற்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்படி செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணைக்கு எதிரானதாக அது அமைந்து விடும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்…

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பதில் தூதுவர் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோர் பம்பரமாய் செயற்பட ஆரம்பித்தனர்.

ஜனாதிபதி மைத்திரியை நேரடியாக சந்தித்த அவர்கள் இது தொடர்பான தங்களது அதிருப்தியை தெரிவித்ததுடன் , ஜீ எஸ் பி பிளஸ் மற்றும் இதர விடயங்களில் இந்த விவகாரம் செலுத்தும் தாக்கும் குறித்தும் எடுத்துக் கூறினர் .

இதனையடுத்து அமெரிக்கா புறப்பட முன்னர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணிலுடன் நீண்ட மந்திரலோசனை நடத்திய ஜனாதிபதி , முன்னதாக இதனை அமைச்சரவையில் கூறியிருந்தாலும் அதனை மாற்ற வேண்டிய நிலைமை குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்…

அப்போது கருத்து வெளியிட்ட ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் , அரசியல் கைதிகள் விடுதலை என்ற போர்வையில் போர்க்குற்றச்சாட்டு உள்ள படையினர் மீதான பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் நிறைவேறினால் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக கோடி காட்டியிருக்கிறார்..

இதன் பின்னர் ஜனாதிபதியின் அந்த விசேட பொறிமுறைத்திட்டம் கைவிடப்பட்டது…

சிக்கிய மனோ !

இந்த இராஜதந்திர சிக்கலுக்குள் அமைச்சர் மனோவும் மாட்டிக் கொண்டாரென தகவல்..

இந்த பொதுமன்னிப்பு வழங்கும் திட்டம் குறித்து ஏற்கனவே அமைச்சரவையில் அறிந்த மனோ அமெரிக்க விஜயத்திற்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதும் அதிர்ந்து போனதாக தகவல்…

இந்த மன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்வதில் மகிழ்ச்சி அடைந்தாலும் போர்க்குற்றச்சாட்டுகளை உண்மையில் கொண்ட படைத்தரப்பு இதில் நிவாரணம் பெறுவதில் தமக்கு உடன்பாடு இல்லையென கருதிய மனோ – பாராளுமன்றத்தில் இதனை பிரதமர் ரணிலிடம் கூறி அமெரிக்காவுக்கு செல்ல முடியாதென மறுத்ததாக தகவல் ( இது தவறெனில் அமைச்சர் மனோ மறுக்கலாம்)..

ஆனால் மனோவை ஆசுவாசப்படுத்திய ரணில் ,இது ஜனாதிபதி விடுத்த அழைப்பு- அதற்கப்பால் இது தமிழ் மக்களின் சார்பில் நீங்கள் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாராம்.. இதனையடுத்து அவர் சம்மதம் சொன்னதாகவும் தகவல்..

அதேசமயம் அமெரிக்கா புறப்பட முன்னர் கொழும்பிலுள்ள பதில் அமெரிக்க தூதுவர் , மனோவை சந்தித்து இந்த விடயம் குறித்து விளக்கி – இவற்றை உரியவர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டாரென்றும் – அதன்படி டோஹாவில் இருந்து நிவ்யோர்க் செல்லும்வரையான 14 மணி நேர காலத்தில் ஜனாதிபதியுடன் மனோ இதனை விவாதித்துக் கொண்டு சென்றதாகவும் அறிய முடிந்தது…

அத்துடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ஜனாதிபதியிடம் தற்போதைய சூழ்நிலை ,அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது பற்றி ஜனாதிபதியிடம் விளக்கியபடி சென்றதாகவும் தெரிகின்றது…

இதுவே காரணம் ..

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தான் திட்டமிட்ட பொறிமுறையை முன்வைக்க முடியாமல் போனமைக்கு இதுவே காரணம் …

சிலசமயம் இது முன்வைக்கப்பட்டிருந்தால் பௌத்த மாநாயக்க தேரர் மற்றும் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்திருக்க கூடும் …

மறுபுறம் இப்படி நடந்திருந்தால் – ஜனாதிபதி படையினரை காப்பாற்றிவிட்டார் என கூறி அரசுக்கு வழங்கிவரும் தார்மீக ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் வந்திருக்கக் கூடும்.. ( ஏனெனில் விக்கினேஸ்வரன் அதனை நன்கு பயன்படுத்தியிருப்பார் ).. இப்போதுள்ள நிலையில் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இது வாய்ப்பாக அமைந்திருக்கும்..

ஆனால் மேற்குலகத்தின் அழுத்தம் இவை எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்து விட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *