போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? தமிழர் தரப்பு அடியோடு நிராகரிக்கும்! – அடித்துக் கூறுகின்றார் சிறிகாந்தா

“போர்க்குற்றவாளிகளுக்கு அரசியல் கைதிகளுடன் இணைந்து பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நா. சபையில் முன்வைக்கவுள்ள நிலையில், அந்த யோசனையைத் தமிழர் தரப்பாக நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். போர்க்குற்ற விசாரணை நடைபெற்று நீதி வழங்ககப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா.

“இந்த விடயத்தில் எவ்வித அரசியல் குதிரைப் பேரத்துக்கும் தமிழர் தரப்பு தயாராக இல்லை. போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது மைத்திரி – ரணில் அரசின் பகற்கனவாகவே அமையும்” என்றும் கூறினார்.

ரெலோ அமைப்பின் செயற்குழுக் கூட்டம் யாழ்.வை.எம். சி.ஏ. மண்டபத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலையே சிறிகாந்தா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனத் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழர் தரப்புக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கமைய பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் சிறைகளிலுள்ள கைதிகளும் தமது விடுதலையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நா. சபையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட இருக்கிறார். அந்த அறிவிப்பானது தமிழர் தரப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆகவே,அந்த விடயம் குறித்து நாங்கள் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த வேண்டியதொரு தேவை ஏற்பட்டுள்ளது.

போரில் சர்வதேசச் சட்டங்களுக்கு மாறாக – மனித உரிமைகள் சட்டத்துக்கு முரணாகத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கவும் தமிழர் தரப்புக்களால் கோரப்படும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன் போர்க்குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் அவரது யோசனை அமையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எங்கள் கட்சியும் சரி நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்பதில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்.

ஆகவே, மைத்திரி – ரணில் கூட்டு அரசு மிகவும் இராஜதந்திரமாக போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் முன்வைக்கும் இந்த யோசனையைத் தமிழர் தரப்பு முழுமையாக எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் இந்த விடயத்தில் எந்தவித சமரசத்திற்கும் நாம் போகவே மாட்டோம். எந்தவித அரசியல் குதிரைப் பேரத்திற்கும் தன்மானம் உள்ள தமிழர் தரப்பு தயாராக இல்லை. போர்க்குற்ற விசாரணை இடம்பெற்று நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம்.

இது எங்கள் கட்சியினதும் நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடாக இருக்கின்றது. இதனை நாங்கள் கூட்டமைப்பின் சார்பிலேயே தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஆகவே, இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர் தரப்பினது நிலைப்பாடு என்பது மட்டுமல்ல கோரிக்கையாகவும் இருக்கின்றது.

போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கதாநாயகர்களாகச் சித்தரித்துள்ள அரசு அவர்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்று கூறி வருகின்றது. அதனால் போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முனைகின்றது. அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசியல் கைதிகள் விடயத்தை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், போர்க்குற்றவாளிகள் வேறு அரசியல் கைதிகள் வேறு என்பதனை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதனை விடுத்து எப்படியாவது போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைத்தால் அது வெறும் பகல் கனவாகவே அமையும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *