தமிழ் அரசியல்வாதிகள் அசிரத்தை! – உண்ணாவிரதக் கைதிகளின் உறவுகள் கவலை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதில்லை என்று அப்போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் வடகு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் போராட்டத்தில் வெகுஜன அமைப்புக்களைச் சேர்ந்தோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் தரப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டும் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பை விடுத்திருந்த போதும், முதலமைச்சரோ அல்லது அவர் சார்பில் எவருமோ இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இது தவிர, இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட செயலகத்திற்கு மிக அருகில் உள்ள வை.எம்.ஏ.ஒ. மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது.

இக்கூட்டத்தில் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு, தமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

தமது கட்சியின் நலன் தொடர்பிலான கூட்டத்தை நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டும் மிக அருகில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஏனையவர்கள் அப்போராட்டத்திற்கு அருகில் கூடச் செல்லாது, தமது கட்சிக் கூட்டத்தை முடிந்த்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவார் எனக் கூறி எழுத்து மூலமான தேர்தல் விஞ்ஞாபனத்துடன் தேடி வந்து வாக்குகளை பெற்றுச் சென்ற தமிழ் அரசியல்வாதிகள், வாக்களித்தவர்கள் வீதியில் போராடிக் கொண்டிருக்கையில் கண்டுகொள்ளாமல் சென்றமை தமக்கு மிக வருத்தமளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *