உண்ணாவிரதக் கைதிகளின் உடல் நிலை படுமோசம்! – நால்வர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்து அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 11ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் நேற்றுமுன்தினம் இரவு அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில், நேற்று மேலும் இரு கைதிகளும் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரே சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கடந்த வாரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நான்கு கைதிகளும் அங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தியாவது விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியல் என்ற பெயரில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *