‘அன்பெனும் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஒரு பெண்ணின் புலம்பல்’! – போதநாயகியின் இறுதிக் கவிதை

காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும் ஈழத்துக் கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவியுமான போதநாயகியின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் இறுதியாக கடந்த வியாழக்கிழமை (20.09.2018) அன்று ஒரு உருக்கமான வலிசுமந்த வார்த்தைகளுடனான கவிதை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த கவிதை பின்வருமாறு அமைந்துள்ளது.

வருடம் ஒன்றாகி விட்டது, உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே….

நான் கவிஞருமல்ல; இது கவிதையுமல்ல…….

அன்பெனும் கூரிய ஆயுதத்தால்

கொடூரமாகத் தாக்கப்பட்ட

ஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்…..

பெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என

சில பெண்கள் புலம்பியபோது

பெரிதாக உணரவில்லை

அதன் அர்த்தமதை….

அர்த்தமது ஆழமாக உணரப்பட்டதால்

இப்போது இயம்புகின்றேன்…..

“நல்லவன்” என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது….

நான் உன்னை தேர்ந்தெடுப்பதற்கும்

நீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்….

அத்தகுதியும், உன் மேல் கொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே

இன்றென்னை அணுஅணுவாய்

கொல்கிறது……

அதீத அன்பு அருகதையற்றோர் மீது

காட்டப்படுவதால் தானோ என்னவோ

அது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது…

அன்பே உருவானவர்கள் நாமெல்லோரும்….

இதில் ஆணென்ன பெண்னென்ன

சமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின் அவர் மானிடரே அல்லர்.

உங்களுக்கு உண்மையாய், உயிராய்

இருக்கும் பெண்ணவளை

உயர்வாய் எண்ணாவிடினும்

ஓர் உயிருள்ள ஜீவனாய் உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்…

அவள் உயிர் பிரியும் வேளையிலும்

உன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்….

மாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால், இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும்

எல்லையில்லா அவள் அன்பை

எள்ளளவும் பெற மாட்டீர் என்பது

திண்ணம்…….

– இவ்வாறு குறித்த கவிதை அமைந்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *