குதிரையைக் கைவிட்டு மயில் சவாரிக்கு தயாராகின்றார் உதுமாலெப்பை! – நாளை முக்கிய முடிவு
முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது நிலைப்பாட்டுக்கு தேசிய காங்கிரஸின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே கட்சியின் பதவிகளை இராஜிநாமாச் செய்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
கொழும்பு, புதுக்கடையில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம்.காசிம், ஏ.ஜி.எம்.தௌபீக் ஆகியோருடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தொடர்ந்து தேசிய காங்கிரஸில் எனது பயணம் தொடரும். நாளை தலைவர் அதாவுல்லாவுடன் நடத்தப்படவுள்ள சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளுடன் இணங்கிச் செல்லும் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவேன்.
அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செயற்படுவது பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகிவிடும். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலிலும் விழிப்பாகவும், விட்டுக் கொடுப்புடனும் பேரினவாதக் கட்சிகள் கூட்டாகச் செயற்படவுள்ளன. இப்பின்னணியில் முஸ்லிம் சமூகக் கட்சிகள் பிரிந்து செயற்படுவதன் ஆபத்தை என்னால் உணர முடிகின்றது. இதன் ஆபத்தை தேசிய காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தி வருகின்றேன். நாளைய சந்திப்பிலும் உணர்த்துவேன்.
சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு எனது கட்சித் தலைமையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புகின்றேன். “சமூகக் கட்சிகளின் கூட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாத்துடன் சேர முடியாது. அவருடன் இணங்க முடியாது. இவருடன் நெருங்க இயலாது” எனத் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் காலம் கடத்த முடியாது. சமூக ஒற்றுமையை ஏற்படுத்தி பேரினவாதம், கடும்போக்குவாதங்களை அடியோடு வீழ்த்தும் எனது வியூகம் வெற்றியளிக்கும் வரை தேசிய காங்கிரஸின் தொண்டனாகவே உழைப்பேன்.
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற உங்கள் புத்தக (வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்) வெளியீட்டு விழாவில் இப்பரந்த நோக்கத்துடனே நான் பங்கேற்றேன்” – என்றார்.