ஐ.நாவின் பிரதானக் கூட்டத்தொடர் 25 இல் ஆரம்பம்! – இன்றிரவு அமெரிக்கா பறக்கிறார் மைத்திரி

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (22) இரவு அமெரிக்கா பயணமாகிறார்.


“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல்: அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளின் கீழ் ஐநா. பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐநா. தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி , ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளுதல் நாட்டின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இராணுவத்தினரின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தல் தொடர்பாக இதன்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட முன்மொழிவொன்றை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெறுகின்றது.

இம்மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக இந்த சமாதான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *