கிழக்குப் பல்கலை பெண் விரிவுரையாளர் திட்டமிட்டுக் கொலை! – கணவர் மீது சந்தேகம்

காணாமல்போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளரான போதநாயகி திட்டமிட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும், அவரது கணவர் மீதே தமக்கு சந்தேகம் உள்ளது எனவும் பொலிஸாரிடம் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

“எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவர் அல்லர். அதற்கான எந்தத் தேவையும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா – ஆசிகுளம் இலக்கம் – 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் மேலும் தெரிவிக்கையில்,

“எமக்கு திருமணம் ஆகி ஐந்து மாதங்களே ஆகின்றன. எனது மனைவி விரிவுரையாளர் என்பதால் கிழமையில் ஐந்து நாட்கள் திருகோணமலையில் இருப்பார்.

நான் கிளிநொச்சியில் வேலை பார்ப்பதால் நான் கிளிநொச்சியில் இருப்பேன். வார இறுதி நாட்களில் நான் திருகோணமலை செல்வேன் அல்லது எனது மனைவி கைச்சிலை மடுவில் உள்ள எமது வீட்டுக்கு வருவார்.

கடந்த வாரம்கூட அவர்தான் இங்கு வந்திருந்தார். அவர் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது.

கடந்த புதன்கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகின்றேன; எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என்று கூறினார்.

அதன் பின்னர் அவரது தொலைபேசி செயற்படவில்லை. அவர் சில வேலைப்பளு காரணமாக அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என நான் நினைத்தேன்.

பின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை எனவும், அவரைக் காணவில்லை எனவும் கூறினார்.

பின்னர் அவரது கைப்பை திருகோணமலை நகர கடற்கடைப் பகுதியில் இருக்கின்றது எனவும், சடலம் கடலில் மிதக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்லர். அதற்கான எந்தத் தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது” – என்றார்.

இதேவேளை, பெண் விரிவுரையாளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மேலதிக நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமையவே போதநாயகியின் சடலம் இன்று காலை 10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது என திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் ஒரு மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதன்படி அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும், அவர் மூன்று மாதக் கர்ப்பிணி எனவும், பெண் நீரில் மூழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுத் திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்தது எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு கடலில் குதிக்க வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது திட்டமிட்டுக் கடலில் தள்ளி விழுத்தப்பட்டிருக்கலாம் என்று பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *