போர்க்குற்றங்களிலிருந்து படைகளைக் காக்க தமிழ் அரசியல் கைதிகள் பகடைக்காய்களா? – மைத்திரிக்கு எழுதிய கடிதத்தில் விக்கி கேள்வி

“இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகக் கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டி வரும்போது தமிழ்ச் சிறைக் கைதிகளைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவே அவர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்காது தாமதிக்கின்றீர்களோ என்று எண்ணவேண்டியுள்ளது. என்றாலும் உங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை. உங்கள் வாக்குறுதிகளை நிலைநாட்டுவீர்கள் என்று இன்னமும் நம்புகின்றேன்.”

– இவ்வாறு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்குப் பிரதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான முன்னைய பல கடிதங்களின் தொடர்ச்சியாக இந்த அவசர கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

வடக்கு மாகாணத்துக்கு நீங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பல தருணங்களில் (தமிழ்) அரசியல் கைதிகள் பற்றி உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்திருந்தீர்கள். வழக்குப் பதியப்படாமல் சிறையில் தொடர்ந்து விளக்க மறியலில் இருப்போருக்கு எதிராக உடனே வழக்குகள் பதியப்படப் போவதாகவும் போதுமான சாட்சியங்கள் இல்லாதவரை உடனே விடுவிக்கப்போவதாகவும் நீங்கள் வாக்குறுதிகள் அளித்தும் அவை இற்றைவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது சம்பந்தமாக முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும் அவரின் நேரடி உள்ளீட்டை வேண்டிக் கடிதம் எழுதியிருந்தேன்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மற்றையோராலும் என்னாலும் இது சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட பிரயத்தனங்கள் எவையும் பயனளிக்கவில்லை. இதன் காரணத்தால்தான் அனுராதபுரம் அரசியல் சிறைக் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவேண்டி வந்துள்ளது.

கொழும்பு, பூஸா போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இவ்வாறான கைதிகளும் மேற்படி போராட்டங்களில் ஈடுபடுவது பற்றிக் கருத்துக்கள் பரிமாறிக்கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதிய கடிதத்தின் மூலம் உங்களின் செயலாளர் சட்டத்துறைத் தலைமை அதிபதிக்கு (யுவவழசநெல புநநெசயட) ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் உங்களுக்கு அனுப்பப்பட்ட எனது கடிதத்தில் கண்டவாறு சட்டத்தரணிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்றும், கைதிகள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. வழக்கமாக நீதிமன்ற வழக்குகள் தாமதப்படுவது பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவை சம்பந்தமான உரிய நடவடிக்கைகள் நேரத்துக்கு எடுத்துச் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படாமையாலேயே சிறைக் கைதிகள் உங்கள் வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்து மேற்படி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரிந்திருக்கும்.

நாட்டில் சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் உண்டுபண்ண நல்லாட்சி அரசு மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று கூறப்படும் கூற்று மேற்படி அரசியல் சிறைக்கைதிகள் சம்பந்தமாக நீங்கள் காட்டும் தாமதத்தின் நிமித்தம் வெறும் கண் துடைப்போ என்று எண்ணவேண்டியுள்ளது.

இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும்போது மேற்படி தமிழ்ச் சிறைக் கைதிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தவே அவர்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்காது தாமதிக்கின்றீர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. என்றாலும் உங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை. நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை நிலைநாட்டுவீர்கள் என்று இன்னமும் நம்புகின்றேன்.

மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் சம்பந்தப்பட்ட பல தரப்பாரின் கருத்துக்களை அறிந்து உடனேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. கருத்துக்களை அறிந்த பின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உகந்த நிவாரணங்களை உடனேயே வழங்குவது உங்கள் தலையாய கடமை என்பதை உங்களுக்கு (தாழ்மையுடனும் அன்புடனும்) கூறி வைக்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *