ஆவா குழுவுக்கு இரண்டே நாட்களில் முடிவு கட்டுமாம் இராணுவம்!

“நாட்டின் சட்டம் ஒழுங்கை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம். இல்லையேல் ஆவா குழுவை இரண்டு நாள்களுக்குள் அடக்குவோம்.”

– இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பன பொலிஸாரிடம் உள்ளன. அதனால் அவற்றில் நாம் தலையிடுவதில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவா குழு போன்ற கோஷ்டிகளை அடக்குவது எமக்குப் பெரிய சவால் இல்லை. இரண்டு நாட்களுக்குள் அடக்கி விடுவோம்.

பொலிஸாரினால் அவர்களை அடக்க முடியாது என இராணுவத்தின் உதவியை நாடினால் உதவ நாம் தயாராக உள்ளோம்.

தற்போதைய சூழ்நிலையில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தால், இராணுவம் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்கின்றார்கள் என எம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். அதனால் பொறுமையாக இருக்கின்றோம்.

அதற்காக தொடர்ந்து இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை நாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம். அந்த அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *