யாழ். கோட்டையை இராணுவத்துக்குத் தரவேண்டும்! – படைத் தளபதி ஹெட்டியாராச்சி கோரிக்கை

“யாழ்ப்பாணக் கோட்டையை எமக்குத் தந்தால் நாம் அங்கு முகாம்களை அமைத்துக் கொண்டு பொதுமக்களின் நிலங்களை விரைவாக விடுவிக்கலாம். கோட்டையை எமக்குத் தருமாறு தொல்பொருள் திணைக்களத்திடம் கேட்டிருக்கிறோம். அவ்வாறு கோட்டையைத் தருமிடத்து அங்கு முழுமையாக இராணுவ முகாம்களை நகர்த்துவதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.”

– இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு படைத் தளபதி வழங்கிய பதில்கள் வருமாறு:-

கேள்வி – இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த பொது மக்களின் காணிகள் வேகமாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் தாமதம் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் ஏதும் அழுத்தங்கள் உள்ளனவா?

பதில் – யுத்த காலத்தில் பொது மக்களின் காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் பொது மக்களின் காணிகளை மக்களிடமே ஒப்படைத்து வருகின்றோம். இங்கு இராணுவம் பரந்தளவு பிரதேசத்தை வைத்திருந்தபோது அதில் படைத் தரப்புக்குத் தேவையில்லாத காணிகளை விரைவாக விடுவித்து வந்தோம். அவற்றை விடுவிக்கின்றபோது தேசிய பாதுகாப்புக்கும் பிரச்சினை வரவில்லை. ஆனால், தற்போது தேசிய பாதுகாப்பைக் கவனத்திலெடுத்து அதற்கமையவே காணிகளை விடுவிக்கவேண்டியிருக்கின்றது. ஆனாலும் இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்து தொடர்ந்தும் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி – அவ்வாறாயின் தொடர்ந்தும் காணிகள் விடுவிக்கப்படுமா? எவ்வளவு ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவுள்ளன?

பதில் – அடுத்த கட்டமாக 500 ஏக்கர் காணியை விடுவிக்க இருக்கின்றோம். அந்தக் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அதற்கமைய பல இடங்களிலும் இருக்கின்ற சிறு சிறு முகாம்களை எடுத்து பலாலி தலைமையகத்துக்குக் கொண்டு வருகின்றோம். இராணுவம் நிலங்களை விடுவித்து அங்கிருந்த முகாம்களை அகற்றி வேறு இடங்களுக்குச் செல்வதானால் படையினருக்கு நிதி தேவைப்படுகின்றது. அதே போன்று ஏனைய பல பிரச்சினைகளும் இருக்கின்றன.

கேள்வி – அரசு படையினருக்கு நிதி வழங்கினால் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற பொதுமக்களின் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க முடியுமா? அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில் – படையினருக்கு அரசு நிதியை வழங்கினால் இரண்டு வருடத்துக்குள் மக்களின் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதிலும் ஆறு மாதகாலத்துக்குள் அரசு படையினருக்கு பணம் வழங்கினால் ஆறு மாத காலத்துக்குள்ளும் காணிகளை விடுவிப்போம்.

கேள்வி – அவ்வாறானால் எவ்வளவு பணம் வேண்டும்?

பதில் – எவ்வளவு பணம் என்று சொல்ல முடியாது. ஆனால் எமக்குத் தேவையான பணம் கிடைத்தால் விடுவிப்போம்.

கேள்வி – பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினர் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் மக்கள் காணிகள் இல்லாமலும் தொழில் இல்லாமலும் பாதிக்கப்படுகின்றனரே?

பதில் – இராணுவ நலன்புரிகளுக்காக விவசாயங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழில் வேலையில்லாப் பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி – புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அச்சப்படுவதாகச் சொல்லப்படுகின்றதே?

பதில் – விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 50ஆயிரம் பேருக்குக் கிளிநொச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று யாழ். மாவட்டத்திலும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே முன்னாள் போராளிகளை நாங்கள் கைவிடவில்லை. அவர்களுக்காக அரசுடன் பேசியே வருகின்றோம். அதற்கமைய வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுப்போம்.

கேள்வி – ஆவா குழு என்று சொல்லப்படுகின்ற குழக்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கின்றதா?

பதில் – தேசிய பாதுகாப்பு என்று சொல்கின்ற போது நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும். இங்கு சில குழுக்களுக்கிடையிலான மோதல்தான் நடக்கிறது. அந்த மோதல்களை இராணுவம் கவனிப்பதில்லை. அதனைப் பொலிஸாரே பார்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு அதில் இராணுவம் தலையிட்டால் அந்தக் குழுக்களுக்கு இராணுவமும் துணைபோவதாக எம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.

அரசியல்வாதிகள் இதனைத் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தி எம் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவார்கள். ஆகவே நாம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றோம். அதற்கமையவே இராணுவத்தின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி – உலகிலேயே பலமான அமைப்பாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிட்டதாகக் கூறும் நிலையில் இவ்வாறான குழுக்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? இராணுவம் இங்கு நிலை கொள்வதற்காகவா இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன? அல்லது அந்தக் குழுக்களின் பின்னனியில் இராணுவம் உள்ளதா?

பதில் – இராணுவத்தினருக்கு அவ்வாறான தேவைகள் இல்லை. இந்த நாட்டில் உள்ள நீதிக் கட்டமைப்புக்களுக்கமையவே நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆகவே அதற்கமைய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஆவா குழு போன்ற குழுக்களை இரண்டு நாளில் எம்மால் கட்டுப்படுத்த முடியும். அந்த இரண்டு நாளே எங்களுக்கு மிச்சம் தான். ஆனாலும் நாங்கள் பொறுமையாகவே இருக்கின்றோம். ஏனெனில் சட்டங்களுக்கமையவே செயற்பட வேண்டியுள்ளது.

இலங்கைச் சட்டங்களுக்கமைய இந்த விடயங்கள் தொடர்பில் கட்டுப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கே உள்ளது. ஆகவே, இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவி தேவை என பொலிஸார் அறிவித்தால் நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும். அதனை விடுத்து இராணுவம் நேரடியாக இறங்கினால் எம் மீது அபாண்டாமான பழிகள் சுமத்தும் நிலைமையே வரும். முன்னர் இருந்தமைபோன்று இராணுவம் தற்போது சோதனைகளை மேற்கொள்வதில்லை. அவ்வாறு செய்தால் இராணுவ அடக்குமுறை என்று சொல்லுவார்கள்.

கேள்வி – யாழ். கோட்டையில் படை முகாம் அமைக்கப்படுவதற்குக் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்படுகின்றனவே?

பதில் – யாழ்.மாவட்டத்தில் பல இடங்களிலும் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த இடங்களை விடுவித்து பலாலித் தலைமையகத்துக்கு வருகின்றனர். ஆகவே மேலும் நிலங்களை விடுவிப்பதற்குக் கோட்டையை எமக்குத் தந்தால் நாம் அங்கு முகாம்களை அமைத்துக் கொண்டு நிலங்களை விடுவிக்கலாம். கோட்டையை எமக்குத் தருமாறு தொல்பொருள் திணைக்களத்திடம் கேட்டிருக்கிறோம். அவ்வாறு கோட்டையை தருமிடத்து அங்கு முழுமையாக இராணுவ முகாம்களை நகர்த்துவதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.

கேள்வி – படையினர் வசமிருந்த காணிகள் இங்கு விடுவிக்கப்படும் போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெற்கில் சொல்லப்படுகின்றதே. அது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில் – காணிகள் மக்களுடையவை. அதனையே நாங்கள் விடுவிக்கின்றோம். அதற்காகத் தேசிய பாதுகாப்பு எந்தவிதத்திலும் குறையவில்லை. இங்கு களவு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்தாலும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். ஆகவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு தேசிய பாதுகாப்பையும் குறையாது பாதுகாக்கின்றோம்.

கேள்வி – சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடக்கூடாதென்று வடக்கு மாகாண சபை மற்றும் யாழ்.மாநகர சபை என்பன தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றபோதிலும் நீங்கள் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது ஜனநாயக மரபை மீறாதா?

பதில் – யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கே நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம். அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடுகளை வழங்கி வருகின்றோம். ஆகவே மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

அவ்வாறு நாம் செய்துவரும் செயற்பாடுகளை யார் சொல்லியும் இடைநிறுத்தும் தீரமானம் எமக்கில்லை. ஆகவே எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகவே மக்களுக்கான உதவிகளை வழங்க இருக்கின்றோம்.

கேள்வி – வடக்கில் மீண்டும் புலிகள் உருவாகுகின்றார்கள் என்று தெற்கில் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், வடக்கில் வாள்வெட்டுக்கள்தான் நடக்கின்றன. ஆனால், தெற்கில் தொடர் துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. ஆகவே, பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு இருப்பதாக கருதுகிறீர்கள்?

பதில் – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் இங்கு தான் இருந்தனர். இங்கு தான் விடுதலைப் புலிகள் ஆரம்பித்தார்கள். அதனால்தான் வடக்கை அவதானிக்கின்றோம். அது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் கண்காணித்தே வருகின்றோம்.

கேள்வி – தெற்கிலும் 1980 களில் ஜே.வி.பி. போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்களுக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்கள் தற்போது அரசியலிலும் ஈடுபடுகின்றனர். அத்தோடு அவர்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதே?

பதில் – தெற்கில் போராடிய ஜே.வி.பி. நாட்டைப் பிரித்துத் தரும்படி கேட்கவில்லை. அவ்வாறு தனிநாட்டை வடக்கில்தான் கேட்டார்கள். அத்தோடு புலிகள் இங்கு அழிக்கப்பட்டாலும் வெளிநாடுகளிலுள்ளவர்கள் தற்போதும் தனிநாட்டையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனிநாடு வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர். அனால் ஜே.வி.பி. அவ்வாறு கேட்கவில்லை. அதனால் தான் வடக்கில் அவ்வாறாறு கண்காணிப்பு இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *