தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வவுனியாவில் நாளை சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறி ரெலோ அமைப்பினர், தமிழ் விருட்சம் அமைப்பு, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஈரோஸ் அமைப்பினர், சிகை அலங்கரிப்போர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

“பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். இவர்களைப் பாராமுகமாக அரசு நடத்தி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமது விடுதலைக்காகப் போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்குச் சமூகத்தில் உள்ளவர்கள், ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கவேண்டியது அவசியம்.

இந்த வகையிலேயே அரசியல் கட்சிகள் மற்றும் பொதுஅமைப்புக்ககள் சமூக முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி நாளை மறுதினம் சனிக்கிழமை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *