தாமரைத் தடாகத்தில் தீவிரவாதிகளின் பிடியில் ‘முக்கிய பிரமுகர்’ – மீட்பு நடவடிக்கை இன்று

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை மீட்கும், நடவடிக்கை ஒன்றில் இராணுவம் இன்று ஈடுபடவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில், நீர்க்காகம் தாக்குதல் IX – 2018 என்ற பாரிய கூட்டுப் பயிற்சி தற்போது இடம்பெற்று வருகிறது.


முப்படைகளையும் சேர்ந்த 3100 பேர், மற்றும் 100 வெளிநாட்டுப் படையினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி குச்சவெளியில் நடத்தப்படவுள்ள தாக்குதல் ஒத்திகை ஒன்றுடன் இந்தக் கூட்டுப் பயிற்சி நிறைவடையவுள்ளது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் கொமாண்டோ தாக்குதல் மூலம், தீவிரவாதிகளைக் கைது செய்வது, பணயக் கைதிகளை மீட்பது போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு நெலும் பொகுண எனப்படும் தாமரைத் தடாகம் அரங்கில், தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பிரமுகர் ஒருவரை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை நடத்தப்படவுள்ளது.

இராணுவத் தளபதியின் கண்காணிப்பில் நடத்தப்படவுள்ள இந்த கொமாண்டோ தாக்குதல் ஒத்திகையில் விமானப்படையின் சிறப்பு விமானம், உலங்குவானூர்திகள், கொமாண்டோ படையினர் மற்றும் படைப்பிரிவுகள் பங்கேற்கவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *