சினிமா பாணியில் சம்பந்தனுக்கு சவால் விடுக்கிறார் ஆனந்தசங்கரி!

“சம்பந்தன் தனது பதவியைத் துறந்து ஒரு நாள் அதை எனக்குத் தந்து பார்க்கட்டும். அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் எனக் காட்டுகிறேன்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நான் 2004 ஆம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால், இன்று அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் அந்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது.

அரசின் சலுகைகளை அனுபவித்துவரும் கூட்டமைப்பினர் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தத் தவறியுள்ளனர். அரசைத் தாமே காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசு உருவாக்கப்பட்டது எனவும் வெறுமனே கூறிக்கொள்ளும் சம்பந்தன் நாளை தான் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசப்போகின்றாராம். அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்.

உங்களால் முடியாவிட்டால் நீங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *