அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்! – கண்ணீருடன் உறவினர்கள் உருக்கமான கோரிக்கை

“சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.”

– இவ்வாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அரசினாலும் அரசியல்வாதிகளாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் நிலைமை மாறி எமது உறவுகள் இனியும் தடுத்துவைக்கப்படாமல் விடுவிக்கப்படவேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் தம்மை விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஏனைய சிறைகளில் உள்ள கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர். அதில் அவர்கள் தெரிவித்தவை வருமாறு:-

“தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை விடுவிக்கவேண்டுமென நாம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அதேபோன்று சிறைகளில் இருக்கும் எமது உறவுகளும் தம்மை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு அவர்கள் போராட்டங்களை நடத்தும் ஒவ்வொரு தடவையும் அவர்களைச் சந்திக்கும் அரசியல்வாதிகள் போராட்டங்களை நிறுத்தும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அதேபோன்றே அரசும் அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. ஆனால், அவர்கள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து மன, உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட உறவுகள் தற்போது போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலை தற்போது இன்னும் மோசமாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்ந்தும் சென்றுகொண்டிருந்தால் அவர்களின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்படலாம்.

ஆகவே, இந்த விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களை விடுவிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

எமது அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒண்றிணைந்து கைதிகளின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கோருகின்றோம்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *