தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கக்கூடாது என்ற சிங்களத் தலைவர்களின் மனநிலை மாறவில்லை! – சித்தார்த்தன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற மனநிலையிலேயே சிங்களத் தலைவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களது அந்த மனநிலையில் சிறுதுளி மாற்றம் கூட இன்னும் ஏற்படவில்லை. இதனால், எமது இனத்துக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91ஆவது பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு – கிழக்கில் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் அமரர் அமிர்தலிங்கத்தின் கால்கள் பதிந்துள்ளன. மக்களோடு மக்களாக இருந்த ஒரேயொரு தலைவர் அவர் மட்டுமே. இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் இங்குள்ள சிறுபான்மை இனம் சுதந்திரமாக வாழ சமஷ்டித் தீர்வுதான் ஒரே வழி என்று கூறியிருந்தார்.

ஜி.ஜி.பொன்னம்பலம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட போதும் அதனை நிராகரித்து சமஷ்டிசிக்காகப் போராடியவர் அமிர்தலிங்கம் மட்டுமே. 1980ஆம் ஆண்டுகளில் மாவட்ட சபையை அவர் ஏற்றுக்கொண்டார். மக்கள் படும் துயரங்களாலும் முதலில் இந்த அதிகாரத்தையாவது பெறுவோம் என்ற நோக்கிலேயே அவர் அதனை ஏற்றுக்கொண்டார. இதனை முதல் படியாக வைத்துப் பயணித்தார்.

முன்னைய காலத்திலும் சரி இப்போதும் சரி சிங்களத் தலைவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே கொள்கையில் உள்ளனர். அதிகாரங்களை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இப்போது உள்ளவர்களிடத்திலும் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை. இதனால், எமது இனத்துக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *