ஜனாதிபதியைக் கொல்லச் சூழ்ச்சி: சுயாதீன விசாரணை நடப்பதாக சபைக்குப் பிரதமர் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது என அம்பலமாகியுள்ள தகவல் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெற்று வருகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சபைக்குத் தெரியப்படுத்தினர்.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளையின் 27/2இன் கீழ், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது எனப் பிரதிப் பொலிஸ்மா நாலக டி சில்வாவால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான குரல் பதிவை நாமல் குமாரகே என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார். நாட்டிலுள்ள ஊடகங்களில் அது பிரதான செய்தியாக வெளிவந்தது. எனவே, இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதா?” என்று பொது எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,

“குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடம் மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவடைந்த பின்னரே முடிவொன்றுக்கு வரமுடியும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். இந்த விடயத்தில் அரசு உறுதியாக இருக்கின்றது. எமது நாட்டுப் பிரஜை அல்லாதவர்களுக்கும் நாம் பாதுகாப்பளிப்போம்” என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“விசாரணை இடம்பெற்று வரும்வேளை அனைத்து விடயங்களையும் வெளியிட முடியாது. ஜனாதிபதி மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி அன்று பொதுவேட்பாளராகக் களம் இறங்கியவேளை, அவருக்கானப் பாதுகாப்பை நீக்கியவர்கள்தான் இன்று அவர் தொடர்பில் பேசுகின்றனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *