அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி, ரணிலுடன் நேரில் பேசி தீர்வு காண்பதற்கு சம்பந்தன் முடிவு

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நேரில் பேச்சு நடத்தவுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் தொடர்பில், ஏற்கனவே சிறைகளில் இருந்து விடுதலையாகிய அரசியல் கைதிகள் மூவர் நேற்றுமுன்தினம் கூட்டமைப்பின் தலைவரை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்ட விடயத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

தற்போது அனுராதபுரம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 தமிழ் அரசியல் கைதிகளையும் மிகக் குறுகிய காலப் புனர்வாழ்வின் அடிப்படையிலாவது விடுதலை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறைகளில் உள்ள ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கூட்டமைப்பு விரைந்து செயற்படவேண்டும் என்றும், இந்த விடயத்தில் இனியும் தாமதம் காட்டக்கூடாது எனவும் விடுதலையான அரசியல் கைதிகள் மூவரும் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த சம்பந்தன்,

“அரசியல் கைதிகள் எமது பிள்ளைகள். அவர்கள் எமது உடன் பிறப்புக்கள். அவர்களது விடயத்தில் கூட்டமைப்பு தொடர்ந்தும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்தும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அரசியல் கைதிகள் அனைவரினதும் விடுதலை தொடர்பிலும் நாம் அதிக கவனம் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசி இந்த விடயத்துக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்ட முடிவு செய்துள்ளோம். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன” – என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *