24 மணிநேரத்துக்குள் நல்லிணக்கம் பிறக்காது! – கூறுகின்றார் ரணில்

“இனங்களுக்கிடையில் ஒரே நாளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதுமிகவும் கடினமான பணியாகும். எனினும், படிப்படியாக முன்னேறியேனும் இலக்கை அடைவதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இரத்தினபுரி, இறக்குவானைப் பகுதியில் ‘சாந்தி சிறுவர் நிலையத்தை’ திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாந்தி சிறுவர் நிலையத்தை திறந்துவைப்பதற்காக என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வணக்கத்துக்கரிய ஓபல்மே சோபித தேரரே இதற்குரிய வாய்ப்பை வழங்கினார். நல்லிணக்கம் என்றால் என்ன என்பதை அவர் செயலில் காட்டியுள்ளார்.

போருக்கு முகம் கொடுத்திருந்த நாம் இனங்களாக பிரிந்து நின்றோம். எனவே, தற்போது 24 மணிநேரத்துக்குள் அனைவரும் ஒன்றிணைந்துவிட முடியாது. நல்லிணக்கம் என்பதை அவ்வளவு இலகுவில் – விரைவில் அடைந்துவிட முடியாது. அது கடினமான பயணமாகும். எனினும், இலக்கை அடைந்தாகவேண்டும்” – என்றார்.

அமைச்சர்களான மனோ கணேஷன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *