மனிதர்களே மனித இனத்தை அழிப்பதா? ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்கிறார் ஜனாதிபதி!

புவியினதும் ஜீவராசிகளினதும் இருப்பை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட இயற்கையின் அற்புத படைப்பான ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான தமது கடமைகளை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற ஓசோன் தின தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச ஓசோன் தினம் மற்றும் மொன்றியல் அமைப்பின் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ,

“ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான மொன்றியல் ஒப்பந்தம், வியானா ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.

மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் மரம், செடி கொடி, அருவிகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பினை மனிதர்களே வகிக்க வேண்டும்.

சூழலுக்குப் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதனால் மனிதர்களே மனித இனத்தை அழிவை நோக்கிக்கொண்டு செல்வதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எமது நாட்டில் கட்டுமானம் தொடர்பில் நிலையான கொள்கையொன்று இல்லாமை கடுமையான சூழல் பாதிப்புக்களுக்கு காரணமாக உள்ளது. அரச மற்றும் தனியார் துறையின் உடன்பாட்டின் பேரில் அமைக்கப்படும் தேசிய கட்டுமான கொள்கை துரிதமாக தேவைப்படுகின்றது” – என்றார்.

அதேவேளை, சூழலைப் பாதுகாப்பதற்கான தத்தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி , மர நடுகை நிகழ்வுகள் போன்ற சூழல் பாதுகாப்புக்காக அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *