கேரளக் கஞ்சாவுடன் 4 பேர் கிளிநொச்சியில் சிக்கினர்!

கேரளக் கஞ்சா கடத்தப்படும் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணம் மாறி வருகின்றது. அந்தவகையில் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து சூட்சுமமான முறையில் பொலனறுவைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த 4 கிலோ கேரளக் கஞ்சா கிளிநொச்சிப் பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லத் தயாராக இருந்த கஞ்சாவையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கிளிநொச்சிப் பொலிஸார் இந்தக் கஞ்சாப் பொதியை மீட்டனர்.

இதன் பின்னர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகத் தரித்து நின்ற ஓட்டோவைச் சோதனை செய்த பொலிஸார் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்கப்பட்டதாகக் கூறினர்.

இதன்போது இரு வாகனங்களையும் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விசுவமடுப் பகுதியிலிருந்து ஓட்டோவில் இந்தக் கஞ்சாப் பொதி எடுத்துவரப்பட்டு மெத்தை ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்து பொலனறுவைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இருவரில் ஒருவர் குருணாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *