வடக்கு அமைச்சரவை விவகாரம்: விக்கி தரப்பு இணங்கும் சாத்தியம்

வடக்கு மாகாண அமைச்சரவைச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு இணங்கிவரும் சாத்தியம் உள்ளது எனத் தெரியவருகின்றது.

தற்போது அமைச்சரவையிலுள்ள ஒருவரை நீக்கி, அவருக்குப் பதிலாக டெனீஸ்வரனை அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் தரப்பு இணங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கு அமைச்சரவை தொடர்பில் மூன்று மாதங்களாக இழுபறி நீடித்துக் கொண்டிருக்கின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை வடக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்ட பின்னர், வழக்குத் தாக்கல் செய்த தரப்பினால் கூட வழக்கை மீளப் பெற முடியாது. அதற்கு முன்னதாக, 18ஆம் திகதிக்கு முன்னர் இணக்கப்பாடு எட்டப்படுவதன் ஊடாகவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து முதலமைச்சர் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்காக முயற்சிகளை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தார். வழக்குடன் தொடர்புடைய சகல தரப்புக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தில் முன்னேற்றமான நிலைப்பாடு எட்டப்பட்டதாக இந்த விவகாரத்துடன் தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.

“தற்போதுள்ள அமைச்சரவையில் ஓர் அமைச்சரை நீக்கி அவருக்குப் பதிலாக டெனீஸ்வரனை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளத் தயார். ஆனால், அதனை 18ஆம் திகதிக்கு முன்னர் செய்து முடிக்க முடியாது. 18ஆம் திகதி வழக்கு விசாரணையின்போது டெனீஸ்வரன் தரப்புச் சட்டத்தரணிகள், அன்றைய தினம் குற்றப் பத்திரம் வாசிக்காமல் பிறிதொரு தவணையை மன்றில் கோரவேண்டும்” என்று முதலமைச்சர் தரப்பால் கூறப்பட்டுள்ளது.

“முதலமைச்சரின் சட்டத்தரணி 18ஆம் திகதி மன்றில் தோன்றி, நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளை செயற்படுத்தப்படும் என்று தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் குற்றப் பத்திரிகை பிறதொரு தவணையில் மன்றில் வாசிப்பதற்கு கோரிக்கை விடுவதற்குத் தயார்” என்று டெனீஸ்வரன் தரப்புச் சட்டத்தரணிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கும் முதலமைச்சர் தரப்பு இணங்கி வருவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன எனத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *