குடும்ப ஆட்சியை நிலைநாட்ட மோடியிடம் மஹிந்த தஞ்சம்! – ஐ.தே.க. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குச் சென்று இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றார். இலங்கையில் குடும்ப ஆட்சியை நிலைநாட்டுவதே அவரது பயணத்தின் நோக்கமாக உள்ளது. டில்லியில் ஒரு முகத்தையும் கொழும்பில் போலி தேசப்பற்று முகத்தையும் காண்பித்து நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒருபுறம் இந்தியாவையும் மறுபுறம் இலங்கை மக்களையும் ஏமாற்றி வருகின்றார். சீனா சென்று இந்தியாவைப் பற்றி குறைக்கூறுவதும் இந்தியாவுக்குச் சென்று சீனாவை குறைகூறுவது மட்டுமல்லாமல் இலங்கைக்கு வந்து சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் பற்றியும் குறை கூறுகின்றார்.

13ஆம் அரசமைப்புச் சீர்த்திருத்தத்துக்கு அப்பால் அதிகமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு இங்கு வந்து தலைகீழாகவே செயற்பட்டார். இவ்வாறு இருவேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து இந்தியாவையும் இலங்கையையும் ஏமாற்றி வருகின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்த போது அன்றைய தினத்தை கருப்புத்தினமாக அறிவிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். எதிர்தரப்பினரின் இதுபோன்று இரட்டை வேடம் தரிக்கும் நாடகங்களினாலேயே இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருந்ததை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்து.

இந்தியா சென்றுள்ள மஹிந்தவிடம் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான வேட்பாளர் உங்களது குடும்பத்தை சார்நதவராக இருப்பாரா அல்லது வேறொரு நபரை தெரிவு செய்வீர்களா என்று வினவியபோது அதற்கு அவர் ஜனாதிபதி வேட்பாளருக்காக தனது சகோதரர் (கோட்டாபய ராஜபக்ஷ) முன்வரலாம் என்று குறிப்பிட்டிருந்தார். வயது சிக்கலினால் மகன் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக தெரிவுசெய்ய முடியாது. ஆனால், நிச்சயமாக எனது சகோதரர் தேர்தல் வேட்பாளராக இருப்பார். கட்சியே யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று பதில் அளித்திருந்தார்.

நாமல் ராஜபக்ஷ அல்லது அவரது சகோதரர் வேட்பாளராக இருக்கு வேண்டும் என்பதே அவரின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தனது மகன் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். எதிர்த்தரப்பின் சார்பில் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயககார போன்றவர்களை நிறுத்துவதை மறுத்து குடும்ப ஆட்சியை நிலைநாட்ட மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றார்.

இங்கு தனது சகோதரரின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராகக் குறிப்பிட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி இந்திய ஊடகத்தில் பகிரங்கமாக தனது மகனை ஜனாதிபதியாக்குவேன் என்று குறிப்பிடுவது ஏமாற்று வேலையாகும். மக்களை ஏமாற்றும் தனது இரட்டை வேடத்தை இந்திய ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக மஹிந்த வெளிப்படுத்திவிட்டார்”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *