குடும்ப ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – மஹிந்தவின் கருத்துக்கு வெல்கம கடும் எதிர்ப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்ஷ குடும்பத்துக்கு மாத்திரம் சொந்தமாக்கிக் கொள்ள இடமளிக்க முடியாது. ஜனாதிபதி வேட்பாளருக்கு கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதைவிடுத்து தனது சகோதரர் வேட்பாளராகலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோரர் நியமிக்கப்படலாம் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறுகூறினார்,

அவர் மேலும் தெரிவித்ததாவது:- ”

“குடும்ப ஆட்சி நாட்டுக்குப் பொருத்தமில்லை. மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றார். ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மாதிரியும் ஏனையவர்களுக்கு வேறுவிதமாகவுமே அவர் செயற்பட்டார். குடும்ப உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்கி வந்தார். அதற்கு அமைச்சசர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் ஜனாதிபதித் தேர்தலில் சிலர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டனர். அவருடன் ஒன்றாக இருந்தவர்களும் மறைமுகமாக அவருக்கு எதிராக செயற்பட்டு வந்தனர்.’

மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அதேபோன்று எனது மகனும் இருக்கின்றார். மஹிந்த ராஜபஷசவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவும் இருக்கின்றார். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்காக இந்த கட்சியை அவரது குடும்பத்துக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளக்கூடாது. அதற்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம். கட்சி என்றும்போது அது அனைவருக்கும் உரித்தானதாகும். எமது கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.

ஜே.ஆர். இடமிருந்து ரணசிங்க பிரேமதாஸ விருப்பத்துடன் ஆட்சிப் பொறுப்பை எடுக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்க மஹிந்த ராஜபகஷவுக்கும் விருப்பத்துடன் வேட்பாளர் நியமனத்தை வழங்கவில்லை. அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றது, கட்சியில் அவருக்குரிய இடத்தை வழங்காதமைக்காகும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டுமொரு சிறிசேனவை உருவாக்கப்போகின்றாரா என்ற சந்தேகமே தற்போது எனக்கிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரே ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று இந்திய ஊடகத்துக்கு தெரிவித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

எமது கட்சியில் ஆரம்பம் முதல் வேறு கட்சி உறுப்பினர்கள் இணைந்து செயற்படுகின்றனர். அவர்களில் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கின்றனர். தற்போது தெரிவிக்கப்படுபவருக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லை. அவர் குறைந்த பட்சம் பிரதேச சபையில் கூட இருந்ததில்லை. குடும்ப ஆட்சிக்கு வழியமைப்பதானது எதிர்காலத்தில் மீண்டுமொரு சிறிசேனவை உருவாக்குவதற்குத் தயாராகும் நிலையாகும். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *