படையினரைச் சிறைப்பிடிக்காதீர்! – அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரி ஆவேசம்

முப்படைகளின் பிரதானிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.

இன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.

அதேவேளை, முப்படைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

படையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *