வெற்றிப் பாதையில் வீறுநடை போட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டியதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. அந்த அமைப்பை அழிப்பதற்கு வெளியில் மட்டுமல்லாது, உள்ளேயும் எதிரிகள் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்களின் திட்டங்களைத் தவிடு பொடியாக்கி, வெற்றிப் பாதையில் வீறுநடை போட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு நிற்கின்றது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாட்டில் தற்போதுள்ள அரசியல்வாதிகளில் தலைசிறந்த ஒருவராகக் காணப்படுகின்றார். அவரது பொறுமை கலந்த அரசியல் சாணக்கியம், வேறு எவராலும் கையாளப்பட முடியாத ஒன்று. மிகவும் இக்கட்டான தருணங்களில்கூட அவர் தமது பொறுமையை இழந்ததில்லை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சுயரூபம் வெளியே தெரிவதற்கும், மற்றவர்கள் அவரது நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்தப் பொறுமையே உதவியது. அவரது காலத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடுமென்ற நம்பிக்கை தற்போது மெல்ல மெல்லத் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக்கூட தமிழர்களின் நலன்களுக்காவே அவர் பயன்படுத்தி வருகின்றார். அண்மைக்காலங்களில் இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை. சம்பந்தன் இதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். தமிழர்களின் இன்றைய பிரச்சினைகளை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். இதனால் தமிழர்களின் விவகாரம் வெளியுலகுக்கும் தெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகின்றன.

கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்றுமே அந்தக் கட்சிகளாகும். ஈ.பி.ஆர் எல்.எவ். கட்சியும் முன்னர் கூட்டமைப்பில் இணைந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதன் தலைவர்களுக்கு தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்காததால் அதிருப்திய டைந்த அந்தக் கட்சித் தலைமை காலப்போக்கில் கூட்டமைப்புடனான உறவைத் துண்டித்து வி।ட்டது. இன்று கூட்டமைப்பின் பரம எதிரியாக அந்தக் கட்சி விளங்குகின்றது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புடனான உறவைத் துண்டித்துக் கொண்டதன் பலனை அந்தக் கட்சி அனுபவித்தது. உதயசூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு படுதோல்வியே கிடைத்தது.

கூட்டமைப்பில் உள்ள சிலர் தெரிவிக்கின்ற கருத்துக்கள் அந்த அமைப்பினுள் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றன. சமஷ்டி தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்த பதில்கள் இன்னமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டமைப்பின் ஐக்கியத்துக்கு இது உகந்ததல்ல. இதனை பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கவனத்தில்கொள்ள வேணும்.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த விடயமாக இருந்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை வழங்கித் தீர்வைக் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டவர்கள் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிராமங்கள், நகரங்கள் எனச் சகல இடங்களிலும் கூட்டமைப்பின் கிளைகள் அமைக்கப்படுவதுடன், திறமைசாலிகளை அவற்றுக்குப் பொறுப்பாக நியமித்து மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் கொள்கைகளை விளக்குவதோடு கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களுக்கு உரிய வகையில் பதிலடி வழங்கிக் கூட்டமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தவறான எண்ணங்களை அகற்றிவிட வேண்டும்.

குறிப்பாக பொது எதிரணியினரின் குற்றச்சாட்டுகளுக்குத் தர்க்க ரீதியான பதிலடி வழங்க வேண்டும். அரசுக்கு நெருக்குதல்களை வழங்கித் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான முயற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானதாகும்.

புலம்பெயர் உறவுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுவது மிகவும் அவசியமானதாகும். அதைவிடக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாகவே ஓரம்கட்டிவிட வேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் எப்போதுமே கூட்டமைப்பை வீழ்த்துவதற்கான முயற்சிகளி லேயே ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

கூட்டமைப்பு என்ற பெருவிருட்சத்தைத் தாங்கி நிற்கின்ற தூண்களாக அதன் தொண்டர்கள் விளங்குகின்றார்கள். அவர்களுக்கு எப்போதும் மதிப்பு வழங்குவதில் குறையொன்றும் நேர்ந்து விடக்கூடாது.

எதிர்காலத் தலைவர்கள் இளைஞர்களே என்பதால், இளைஞர்களைக் கட்சிக்குள் உள்வாங்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். அவர்களுக்குக் கட்சி நடவடிக்கைகளில் உரிய பயிற்சிகளை வழங்குவதன் மூலமாக எதிர்காலத் தலைமைத்துவத்துக்கு அவர்களைத் தயார் செய்ய முடியும்.

இன்றைய இளைஞர்கள் சமுதாயத்தினர், முன்பு இருந்ததைப் போன்று தற்போது அரசியலில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. அவர்களது கவனம் வேறு விடயங்களில் திசை திரும்புவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேற்கூறிய விடயங்கள் சரிவரக் கடைப்பிடிக்கப்ப டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இருந்து சேவையாற்ற முடியும்.

– யு.எஸ்.எல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *