மோடியுடன் கைகோக்கத் துடிக்கும் மஹிந்த! – மீண்டும் ஆட்சிக்கு வருவது நூறு வீதம் உறுதி என்றும் தெரிவிப்பு

“2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு முன்னரும், பின்னரும் இந்தியாவின் நரேந்திர மோடி அரசுக்கும் எமக்கும் நிறைய தவறான புரிந்தல்கள் இருந்தன. தற்போது அதனை நகர்த்துவதற்கான நேரம் வந்துள்ளது.”

– இவ்வாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“2019ஆம் ஆண்டு எமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி. நாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் பொறிமுறை, 2008 – 2009 காலப்பகுதியில், விடுதலைப்புலிகளுடனான போரின் போது, இந்திய – இலங்கை உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக, இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய்சிங் ஆகியோரையும், இலங்கைத் தரப்பில் பஸில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, லலித் வீரதுங்க ஆகியோரையும் கொண்டு உருவாக்கப்பட்ட மூவரணியைப் போன்றதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ, ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2015 மார்ச்சில், ‘தி ஹிந்து’வுக்கு அளித்திருந்த செவ்வியில், உங்களின் தோல்விக்குக் காரணம் என்று, றோ புலனாய்வுப் பிரிவை குற்றம்சாட்டியிருந்தீர்கள். சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் அரசியல் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறியிருந்தீர்கள். அது குறித்து கவலைப்படுகின்றீர்களா? என்ற கேள்விக்கு,

“அது இந்தியாவை மாத்திரமல்ல. நான் இந்தியாவைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. வேறு எந்தத் தேர்தல்களிலும், வேறு எவருமே தலையீடு செய்யக் கூடாது என்றுதான் கூறினேன். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். யாரை அதிகாரத்துக்கு கொண்டு வருவது என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விடயம். அதுதான் எனது மனதில் உள்ளது. அந்த நேரத்தில் என்ன செய்தார்கள், என்ன தவறு நடந்தது என்று இப்போது அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என நினைக்கிறேன். எனவே, நாங்கள் கடந்த காலத்தை மறக்க வேண்டும். இது முன்நோக்கிச் செல்வதற்கான நேரம்” என்று மஹிந்த பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *