சொந்த இடத்தில் வாழும் உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கவே முடியாது! – உறுதிபடக் கூறுகின்றார் யாழ். ஆயர்

“சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமையுண்டு. அதனை நாங்கள் விடக்கூடாது. இதனை எவருமே மறுக்க முடியாது.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

கட்டைக்காடு புனைத்தொடுவாய் புனித வேளாங் கன்னி மாதா ஆலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆலயத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஆயர் மேற்கண்டவாறு கூவினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எங்களுடைய சொந்த இடங்களில் வாழ்வதற்கு எமக்கு உரிமையுண்டு. இதனை யாரும் மறுக்க முடியாது. துணிவுடன் எங்கள் இடங்களுக்குச் செல்லவேண்டும் .

இந்த ஆலயம் கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டபோது பல தடைகள் ஏற்பட்டன என ஆலயத்தினர் என்னிடம் வந்து கலந்துரையாடினார்கள். அவர்கள் விவரங்களையும் தந்தார்கள். நான் அதனைக் கிழித்துப் போட்டுவிட்டு, இது எங்களுடைய இடம், இதற்கு யாரும் தடைபோட முடியாது, யாரும் தடுத்தால் என்னிடம் அனுப்பக் கூறினேன். அதன் பின் யாரும் அங்கு வரவில்லை. ஆலயத்தைச் சார்ந்தவர்களை உற்சாகப்படுத்தினேன். இன்று ஆலயம் நிறைவுபெற்று கம்பீரமாகக் காட்சி தருகின்றது” – என்றார்.

இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் யோ. இருதயராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் பங்குமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *