ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரினதும் உடன் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யத் தமிழக மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் விடுதலை குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற ஆயம் இந்த 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையையும் முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடியது.

அமைச்சரவை முடிவு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியவை வருமாறு:-

“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலையில் நீண்ட வருடங்களாகச் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாகும்.

இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் எந்தவிதமான தாமதமும் இன்றி ஆளுநருக்கு உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7 பேர் விடுதலை செய்ய வேண்டிய விடயத்தில் ஆளுநர் தாமதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழக அமைச்சரவையின் இந்தப் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்த ஏழு பேரில் விடுதலை தொடர்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வலுச் சேர்த்திருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *