கூட்டணிக்குள் குத்துவெட்டு

‘தமிழை’ அதிகம் நேசிக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட அந்தக் கூட்டணிக்குள் குடுமிச்சண்டை ஆரம்பித்துவிட்டதாக அரசல் புரசலாக கதை அடிபடுகின்றது.

வீட்டுக்குள் நடக்கும் சண்டை முச்சந்திக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மும்மூர்த்திகளும் குறியாக இருப்பதால், கூட்டணிக்குள் எவ்வித பிரச்சினையுமில்லை என்ற தோற்றமே வெளியுலகுக்கு காண்பிக்கப்படுகின்றது.

ஆனால், கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள். தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்பே அவை வெளிக்கிளம்பும் என்றும், அந்த நாளுக்காகவே எதிர்க்கட்சிக்காரர்கள் வழி மீது விழிவைத்து காத்திருக்கின்றனர் என்றும் மலைமண்ணில் கதை அடிபடுகின்றது.

கூட்டணிக்குள் இருந்தபடியே தனிக்கட்சியைப் பலப்படுத்தல், நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, வெட்டுக்குத்து எனப் பல விடயங்களே குழப்பத்துக்குரிய காரணங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை சரிசெய்து, ஓரணியில் பயணிப்போம் என்று மூத்த உறுப்பினர்கள் சிலர் ஆலோசனை முன்வைத்து – சமரச முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

பழனி முருகனும், மதுரை கணேஷனும், ராதையின் கிருஷ்ணனும் இணைந்து கட்சியைக்காக்க வேண்டும் எனத் தொண்டர்கள் சிலர், கதிர்காமத்துக்குக் காவடி எடுத்ததாகவும் தகவல். எது எப்படியோ, மலைநாட்டு மக்களுக்கு நன்மை நடந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *