ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் ஆசனம் யாருக்கு?

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார் . எனினும் இது குறித்த இறுதி தீர்மானம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக் கொள்ள முடிந்தது. மொத்தமாக பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் மூலமான ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள ஆசனம் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷட் உறுப்பினர்கள் கூடி ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவைகுறித்து நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் 42 வருட அரசியல் பயணத்தில் முதற்தடவையாக பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 500,000 விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க கொழும்பிலும், பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குருணாகலையிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய செயற்குழுகூடி தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *