தோல்வியில் இருந்து மீண்டு வந்த கோலி!

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள். தன்னம்பிக்கை பற்றிப் பேசுவோரும் எழுதுவோரும் மாறாமல் சொல்லும் வார்த்தைகள் இவை.

ஆனால், தோல்வியடையும்போது அல்லது தொடர்ந்து தோல்விகளை மட்டுமே எதிர்கொள்ளும்போது துவளும் மனம் வேறெதையும் பற்றிச் சிந்திக்காது.
தோல்வியை எதிர்கொண்ட கணத்தைவிட, அதற்கான காரணங்கள் என்னவென்பதை விட, ஏற்படுத்திய பாதிப்புகளை விட, வெற்றிக்குப் பதிலாக இது பீடித்துக் கொண்டதே என்ற எண்ணம்தான் மனதில் சுழன்றடிக்கும்.

சாதனையாளர்களுக்கு மட்டும் இது ஏன் பொருந்திப் போவதில்லை? எக்காலத்திலும் எல்லாருக்கும் இது போன்ற சூழல் வாய்க்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அதிகமாக கிரிக்கெட் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஊடகங்களாலும் வறுத்தெடுக்கப்பட்டவரும் இவர்தான். கிரிக்கெட் உலகம் இதனை மறந்தாலும் கோஹ்லி எப்போதும் அதனைத் தன் நினைவடுக்குகளில் இருந்து நழுவ விடுவதில்லை.

அதற்கான காரணம் என்னவென்பதை இக்கட்டுரையின் முதல் வரியே விளக்கும்.

கவனம் நிறைந்த தொடக்கம்!

அரசியல், சினிமா, கலை, வர்த்தகம் என்று எல்லாவற்றிலும் எந்த பின்னணியும் இல்லாமல் மிகச்சாதாரணமாக நுழைந்து பெருஞ்சாதனைகள் படைத்தவர்கள் பலர். அந்த வரிசையில், கடந்த பத்தாண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர் கோஹ்லி.

2008 ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று தம்புல்லாவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் முதன்முதலாகக் களம் கண்டார். அப்போட்டியில் அவர் பெற்ற ரன்கள் 12.
தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் இருவருமே காயம் அடைந்திருந்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில், அதற்கடுத்த நான்கு ஆட்டங்களில் 37, 25, 54, 31 ரன்கள் எடுத்தார் கோஹ்லி.

அந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலமாக, இலங்கையில் அந்த அணிக்கு எதிரான தனது ஆதிக்கத்தைத் தொடங்கியது இந்திய அணி.
இந்த தொடருக்கு முன்னதாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக உலகக்கோப்பையை பெற்ற சாதனையும் கோஹ்லி வசமிருந்தது.

வழக்கமாக, இது போன்ற ரன்கள் பெற்ற ஒரு வீரரை தேர்வுக் குழுவினரால் ஒதுக்கித் தள்ள முடியாது. அதே நேரத்தில், மிகப்பெரிய ஸ்கோர் அடித்து பெரிய ஜாம்பவான்களை சீண்டிப் பார்க்கும் வகையிலும் கோஹ்லியின் ஆட்டம் இல்லை.
இருந்தாலும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரைத் தேடி வாய்ப்புகள் வருவதும் போவதுமாகத்தான் இருந்தன.

கோஹ்லியின் அதிர்ஷ்டம்!

சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என்ற இரண்டு பெரும் சிகரங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் ஓரம்கட்டப்பட்ட காலகட்டம். 2008 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கங்குலி விடைபெற, 2012 இல் ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியுடன் ஓய்வு பெற்றார் டிராவிட்.
ஒருநாள் அணியிலோ சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ்சிங், டோனி, ரெய்னா, ரோஹித் சர்மா என்றொரு படையே அசைக்க முடியாத ஆர்டரில் இருந்தது. இவர்களில் யாராவது ஒருவருக்கு அவ்வப்போது காயம் ஏற்படும்போதெல்லாம், அந்த தொடரில் அவ்வப்போது விளையாட கோஹ்லிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இப்படித்தான் கோஹ்லியின் நுழைவு இந்திய அணியில் நிகழ்ந்தது. ஆனால், கிடைத்த இடைவெளியில் எல்லாம் ‘கோல்’ அடித்தார். அதாகப்பட்டது, கோஹ்லி ரன்கள் குவித்தார்.

இடைப்பட்ட காலத்தில் டெல்லி, இந்தியா ஏ, இந்திய வளரும் வீரர்கள் அணிக்காக விளையாடினார். அதிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

வழக்கமாக, ஏதாவது ஒரு தொடரில் இடம்பிடித்து ரன் குவித்த பிறகும் ஓரம் கட்டப்பட்டால், உள்ளூர் போட்டிகளில் அதே வேகத்துடன் விளையாடி மீண்டும் அணிக்கு திரும்புபவர்கள் மிகக்குறைவு. அந்த விஷயத்தில் தான் ‘கில்லி’ என்பதை நிரூபித்தார் கோஹ்லி.

மிகச்சீரான முன்னேற்றம்!

‘ஒன் டைம் ஒண்டர்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்ப்பது மிகக்கடினமான விஷயம். நம்மையும் அறியாமல் நாம் வெளிப்படுத்தும் மேதமை நமது வீழ்ச்சிக்கு வழி வகுத்துவிடும்.

அதனைத் தவிர்க்க, ஒவ்வொரு முயற்சியிலும் நமது வளர்ச்சியிலும் சீராக வெளிப்படுத்துவது அவசியம். வார்த்தைகளில் மிக எளிதாக இது சொல்லப்பட்டாலும் செயல்பாட்டுக்கு எளிதில் கொண்டு வந்துவிட முடியாது.
அதனை மிக லாவகமாகப் பின்பற்றியவர் கோஹ்லி. ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்தே முதல் சதத்தை தொட்டார்.

ஆனால், அந்த கட்டத்தில் அவர் இந்திய ஒருநாள் அணியில் தவிர்க்க முடியாதவராக இருந்தார். சச்சின், யுவராஜ், கம்பீர், ரெய்னா என்று பலரது இடங்களும் கேள்விக்குறியானது.

அதன் தொடர்ச்சியாக, 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சர்வதேச அளவிலான நட்சத்திரமாகவும் மாறினார்.
நிலைத்தன்மை என்பது கிரிக்கெட்டில் மிக முக்கியம். எந்த தொடராக இருந்தாலும், எத்தனை முறை மிகக்குறைவான ரன்கள் பெற்றாலும் ஓரிரு போட்டிகளிலாவது சோபித்துவிடும் திறமை கோஹ்லியிடம் இருந்தது.

டெஸ்ட் போட்டிகளே இலக்கு!

யுவராஜ்சிங், ரெய்னா உட்பட ஒருநாள் போட்டிகளில் நட்சத்திரமாக ஜொலித்த பல வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் சரியான இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த ரோஹித் சர்மாவும் கூட இதில் விதிவிலக்கல்ல.

ஆனால், 2011 உலகக்கோப்பைக்குப் பிறகான வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முதலாகக் களமிறங்கினார் கோஹ்லி. அதன்பிறகு, வெள்ளைச் சீருடை அணிந்து விளையாடுவதுதான் தனது முதல் இலக்கு என்பதை ஆட்டத் திறனில் வெளிப்படுத்தினார். பிற்காலத்தில் அது பற்றிப் பேசவும் செய்தார்.
சச்சின், சேவாக், டிராவிட், லட்சுமண், கும்ப்ளே போன்ற டெஸ்ட் ஜாம்பவான்கள் மெதுமெதுவாக நடையைக் கட்ட, கம்பீர் போன்ற வீரர்கள் மூன்று வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓரம்கட்டப்பட, கிடைத்த இடைவெளியை மிகச்சரியாக நிரப்பினார் கோஹ்லி. அந்த நேரத்தில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டுமே டோனி சோபித்ததும் அவருக்குச் சாதகமாகிப் போனது.

2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டோனிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்றாலும், வெகு சீக்கிரத்தில் அது கோஹ்லியின் கைக்குக் கிடைக்கும் அளவுக்கு சூழல் அமைந்தது. டோனிக்கு எதிரான மனநிலை வளர்ந்தெழுந்தது.

அப்போது முதல் இப்போதுவரை, டெஸ்ட் அணிக்கான இந்திய அணி எப்போதும் மிகத்தரமானதாக இருந்து வருகிறது.
வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகம்மது சமி ஆகியோரை டெஸ்ட் போட்டிகளுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார் கோஹ்லி. அதேநேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்களையும் டெஸ்ட் போட்டியின் அடையாளங்களாக்க முயற்சிக்கிறார்.

இந்த கோதாவில் தனது சகாவான அஜிங்கிய ரஹானே தனது திறமைகளைக் காட்டவும் அவ்வப்போது வாய்ப்பளிக்கிறார்.

மாற்றத்தை ஏற்படுத்திய தோல்வி!

ஆரம்ப காலத்தில் களத்திற்கு வெளியிலும் சரி, உள்ளேயும் சரி, மிக ஆக்ரோஷமான கோஹ்லியையே பார்த்திருப்பர் பலர். ஒருகட்டத்துக்குப் பிறகு, களத்தில் மிகத்தேவையான நேரங்களில் மட்டுமே ஆக்ரோஷம் வெளிப்படுவதையும் பார்த்து வருகிறோம்.

இந்த மாற்றத்தை வெறுமனே முகத்தில் இருந்து மட்டும் உருவாக்கிவிட முடியாது. அது உள்ளிருந்து பூக்க வேண்டும்.
2014இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பல் திலகமாகிப் போனார் கோஹ்லி. கிரிக்கெட் உலகமே லார்ட்ஸ் மைதானத்திலும், ஓவல் மைதானத்திலும் அவர் வாண வேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்க, ஒட்டுமொத்தமாகவே மிகக்குறைவான ரன்களைச் சேர்த்து மோசமான பார்முக்கு சென்றார்.
போதாக்குறைக்கு நடிகை அனுஷ்காவுடன் (கோஹ்லியின் மனைவி) ஊர் சுற்றுகிறார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் புகைப்படங்களாக பதிப்பித்து தள்ள, உலக ஜாம்பவான்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை அனைவரும் கோஹ்லிக்கு அட்வைஸ் மழை பொழிந்தனர்.

வெளிப்படையாகவே, கிரிக்கெட் தொடரின்போது கேர்ள் பிரண்டை உடன் அழைத்துச் செல்லக் கூடாது என்று சிலர் பேட்டியளித்தனர். ஆனால், அப்போதும் தனது செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை என்றார் கோஹ்லி.

ஆட்டத்திறனில் அசுர மாற்றம்!

ஆட்டத்திறனில் மாற்றம் ஏற்படுத்துவதற்கும், தனது சொந்த வாழ்க்கை செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அவர் உணர்ந்திருந்தார். சமீபத்தில் மயங்க் அகர்வாலுடன் சமூக ஊடகமொன்றில் உரையாடியபோது, இது பற்றிப் பேசினார்.
“2014இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல் என்று சொல்லுவேன். எல்லோரும் சிறப்பாக அமைந்த தொடரைத்தான் அவ்வாறு குறிப்பிடுவார்கள்.

எனக்கு அது மோசமானதாக அமைந்தாலும், அதுதான் நல்ல திருப்பம் தந்த தொடராக இருந்தது. அதன்மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையுடன் விளையாடுவது கடினம். வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது முன்னே சென்று ஆட வேண்டும்.

இதனை சச்சின் டெண்டுல்கர் தன்னிடம் கூறினார் என்று சொன்ன கோஹ்லி, கோட்டுக்கு வெளியே நின்று பந்தை எதிர்கொள்வதன் மூலமாக அவுட் ஆகாமல் தடுக்கும் வாய்ப்பை அதிகரிக்க ரவி சாஸ்திரி ஆலோசனை தந்ததாகக் கூறினார்.
இதனால் கிடைத்த பலனாகவே, 2014ன் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 602 ரன்கள் குவித்தார் கோஹ்லி.

எதைக் கற்க வேண்டும்?

2014 இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்குப் பிறகு, கோஹ்லியின் கேரியரே முடிந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். அசுர வளர்ச்சி வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று வர்ணித்தனர்.

ஆனால், கோஹ்லியின் சிந்தனை வேறாக இருந்தது. 9 வயதில் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து பயிற்சியெடுக்கத் தொடங்கியது முதல் தான் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலிலும் மேலெழுந்தவர், அவ்வாறே இப்போதும் இருக்கிறார்.
தோல்வியைச் சந்தித்ததைவிட, அதற்கான காரணங்களை, அதனைத் தவிர்த்திருக்கும் சாத்தியங்களை, தோல்வியைத் தாங்கும் வல்லமையை மட்டுமே தேடிச் சென்றார் கோஹ்லி.

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை கோஹ்லி கற்றுக் கொண்டார் என்றால், கோஹ்லியின் தோல்விகளில் இருந்து திட்டமிடலையும் நேர்த்தியையும் நிலைத் தன்மையையும் சீரான முன்னேற்றத்தையும் கொண்ட செயல்பாட்டை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கைதான் பல நேரங்களில் வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றாலும், எந்தவொன்றாலும் ஈடு செய்ய முடியாத வார்த்தைகளை தலைமைப் பீடத்தில் வைத்து வணங்குவதில் என்ன சிறுமை இருந்துவிடப் போகிறது!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *