தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலி அரசியலையே நடத்திவருகின்றது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போலி அரசியலையே நடத்திவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பொய் அரசியலை நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியும். நான் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினேன். 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகின்றேன். இக்காலப்பகுதியில் சம்பந்தன் ஒரே கதையைத்தான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். ஹன்சாட்டை எடுத்துபார்த்தால் தெரியும். உரையில் சிறு மாற்றங்கள் இருக்குமேதவிர கருப்பொருள் என்பது ஒன்றாகவே இருக்கும்.இவ்வாறு ஒரே பல்லவியை பாடும் சம்பந்தன் திருகோணமலைக்குகூட செல்லமாட்டார். கடந்த ஆட்சியில் சொகுசுவீடு வழங்கப்பட்டது. ஆனால், வடக்கு மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.  ஒரே கதையைக்கூறிக்கொண்டு இன்னும் எவ்வளவுகாலம்தான் பயணிப்பது?அந்த கதைக்கு வழங்கக்கூடிய தீர்வுதான் என்ன?  எனவே, இந்த கதையில் இருந்து சம்பந்தன் தரப்பு வெளியில் வரவேண்டும். அனைத்து இன மக்களும் இலங்கையராக வாழக்கூடிய புது கதையை ஆரம்பிக்கமுடியும். இப்படியான கதையே எமக்கு தேவை. அதற்கு உயிர்கொடுக்கவேண்டும்.  நான் இந்த நாட்டை நேசிக்கின்றேன். அது பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *