கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 475 கோடி மக்கள் வாழும் 84 நாடுகளின் நம்பத்தகுந்த தரவை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் பரவலின் தொற்றுநோயியல் மாதிரியை அந்த பல்கலைக்கழகத்தின் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டின் ஆராய்ச்சியாளர்களான ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தினமும் 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பத்து நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இரான், இந்தோனீசியா, பிரிட்டன், நைஜீரியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எங்களது ஆய்வில் கொரோனா தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், தீவிரமான பரிசோதனை, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைந்து கண்டறிதல் உள்ளிட்டவை எதிர்காலத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க உதவலாம்” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *