இலங்கையில் முஸ்லிம்களை குறிவைப்பது கவலையளிக்கிறது !

மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில், மனித உரிமைகள் மற்றும் கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து பேசிய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையார் , இலங்கையில் முஸ்லீம் சமூகத்தை குறிவைப்பது குறித்து தன்னுடைய பார்வையை வெளியிட்டுள்ளார்.

“பல நாடுகளில், சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பாரிய எதிர்ப்பினை எதிர்கொள்கிறார்கள் – சில சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் இருப்பவர்கள்கூட விதிவிலக்காவதில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும், முஸ்லீம் சமூகம் தன்மீதான வெறுப்புணர்வால் கொவிட்-19 உடன் தொடர்புபடுத்தப் படுகிறார்கள் என்றும் பல்கேரியாவில், ரோமா மக்கள் பொது சுகாதார அச்சுறுத்தலாக அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சில உள்ளூர் அதிகாரிகள் ரோமா குடியேற்றங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகளை அமைத்து தனிமைப்படுத்தல்களை செயல்படுத்துகின்றதாக கூறிய அவர்,
பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு கடுமையானதாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஹைட்டி, ஈராக் மற்றும் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன.” என்றும் அவர் தனது உரையில் கூறினார்.

“ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவு, பொது சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார ஆதரவோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நடவடிக்கைகள் மூலமாக யாரையும் பின்வாங்க விடாமல் செய்வது, சிறந்த தலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றும் பச்லெட் அம்மையார் குறிப்பிட்டார்.
மேலும் சில நாடுகளில், தொற்றுநோயால் தூண்டப்பட்ட மந்தநிலை, மனித உரிமை மீறல்கள் பெரும்பாலும் பதிவாகும் துறைகள் உட்பட பல துறைகளில் ஏற்கனவே தொழில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான அழைப்புகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அத்தகைய அழைப்புகளை எதிர்க்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையார் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *