ஜூன் இறுதிக்குள் 13.9 கோடி இந்திய நகர மக்களின் சேமிப்புகள் கரைந்துவிடும்!

உலகையே ஆட்கொண்டிருக்கும் கொரோனாவை விட பூதாகரமாக ஒரு புதிய பிரச்னை உருவெடுத்துள்ளது. பல நாடுகள் அதை எளிதில் கையாண்டாலும், சில நாடுகள் அதில் சிக்கி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.அப்படி சிக்கிலில் சிக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஆம்… பொதுமுடக்கத்தால் 13.9 கோடி இந்திய நகர மக்களின் வாழ்நாள் சேமிப்புகள் ஜூன் இறுதிக்குள் காலியாகிவிடும் என்று ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.

அதில் ஆறுதல் தரும் செய்தியாக கிராமப்புறங்களில் ஓரளவு சமாளிக்கலாம் என்கிறது.இந்த கொரோனா பொது முடக்கத்தினால் இந்திய நகரங்களில் வசிக்கும் 62% பேரின் வருமானமும், கிராமப்புறங்களில் உள்ள 50% பேரின் வருமானமும் வீழ்ந்துவிட்டது. முதல் 21 நாள் பொது முடக்கத்தின்போதே 9.2 கோடி நகரவாசிகள் மற்றும் 8.9 கோடி கிராமவாசிகளின் சேமிப்புகள் காலியாகி, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம்.
2015ல் தேசிய அளவில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான மாத வருமானத்தில் வாழ்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 67% என்கிறது அசிம் பிரேம்ஜி நிறுவனம் தயாரித்துள்ள State of Working India Report 2018.

இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு இன்றைய காலத்தில் ஒரு குடும்பம் அடிப்படை வசதிகள் பெற்று, குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தோடு நாகரிகமான வாழ்க்கையை வாழ்வது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஓரளவு சமாளிக்க கூடியவர்களாகவும், நகர்புறங்களில் உள்ள 13.9 கோடி பேரின் சேமிப்பு இம்மாதத்துடன் காலியாகப் போகிறது என்றும் (NSS) ஆய்வு கூறுகிறது. இந்த வேறுபாடு ஏன்?

நகர்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பிளம்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். வந்தவர், ‘ஊருக்குப் போறேன்’ என்றார். ‘ஏய்யா’? என்று கேட்டேன். ‘மாத வீட்டு வாடகை ரூ.9,000. கரண்ட் பில் ரூ1,000 சேர்த்து ரூ.10,000 ஆகுது. இந்த மூணு மாசம் லாக்டவுன்ல ரூ.30,000 வட்டிக்கு வாங்கி இருக்கிறேன்…’ என்றார்.

இவர்களைப் போல் தினக்கூலிகள் ஏராளம். வீடு, உணவு, படிப்பு, மருத்துவம்… என்று இருக்கிறது. இதற்கெல்லாம் கிராமப்புறங்களைப் போல் அதே அளவில் சம்பாதித்தாலும் கூட அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி இருக்க இந்த மாதம் வரை சேமிப்பு இருந்ததே பெரிய விஷயம். நகரங்களில் குடிக்கிற தண்ணீரும் விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. எனவே பலர் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டு
கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழல் மாறுமா?

இதற்கு பின் நமக்கு பிளம்பர் தேவைப்படாமலா போகப் போகிறார்..? அவருக்கான தேவையும் இங்கு இருக்கிறது. அவரது தேவையை கிராமம் எந்த அளவு பூர்த்தி செய்ய போகிறது என்பதும் இருக்கிறது. படிப்பு, மருத்துவம்… என்று அவர்களும், எல்லாமே அருகில் கிடைக்கும் நகரத்தின் வசதிக்கு பழக்கப்பட்டுள்ளனர். இங்கு இருந்தால் பசிக்கிறது, உணவுக்கு வழியில்லை என்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், அங்கும் பசித்தால் மீண்டும் இங்கேயே திரும்பி வருவார்கள்.

வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்களை நம்பி இருக்கும் மக்கள் தொகையின் பங்கு 50% இருக்கும் போது அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை வழங்கும் சக்தி அத்துறைக்கு இல்லாதது ஏன்?

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இருக்கிறது. அதன் எம்டி-க்கும், அவருக்கு மேல் இருப்பவருக்கும் எவ்வளவு சம்பளம் இருக்கும்? ஒரு நாளைக்கு 3 கோடி என்றால் அது எவ்வாறு விநியோகம் ஆகியுள்ளது என்பது இருக்கிறது. அதில் கீழ் மட்டத்தில் இருப்பவர் முதல் எல்லாம் சேர்ந்துதான் அதன் லாபத்தை தீர்மானிக்கின்றன.

அவ்வாறு பெற்ற லாபம் எவ்வாறு விநியோகம் ஆகிறது என்பது ஒன்று. அதேப்போல் யார் யாரிடம் பேரம் பேசுகிறார்கள் என்பதும் இருக்கிறது. அவ்வாறு யாருக்கு பேசும் திறன் இருக்கிறதோ அவர்கள் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.நகர்ப்புறங்களோடு ஒப்பீடும் போது கிராமப்புறங்களில் உள்ளவர்களிடம் பேரம்பேசும் திறன் இருப்பதில்லை. வெங்காயம் விலை ஏறினால் அதைப் பற்றி பேசுகிறோம். அதே வெங்காயம் விலை குறைந்தால் அந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதா? இதுதான் வித்தியாசம்.

கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு போதுமான வருமானம் செல்லாமல் அரசு பார்த்து கொள்கிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கட்ட மாட்டார்கள் என்றும், நகர்புறங்களில் உள்ளவர்கள் கட்டுவார்கள் என்றும் ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளது.

இதன் மூலம் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் குரல் எழுப்பாமல் அரசு பார்த்து கொள்கிறது.அதேவேளையில் விவசாயிகளிடம் ஒற்றுமையும் கிடையாது. மகாராஷ்டிரத்தில் உள்ளவனுக்கு வெங்காயம் விலை குறைகிறது என்றால் தஞ்சாவூரில் இருப்பவன் காதில் கூட வாங்குவதில்லை. ஆனால், விலை ஏறும் போது நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் ஒரே குரலில் ‘விலைவாசி ஏறிடுச்சு’ என நிற்கின்றனர்.

விவசாயிகளிடம் ஒற்றுமை, பேசும் திறன்… கிடையாது. நகரத்தின் லாபி ரொம்ப பவர்ஃபுல்லானது. குரல் இருக்கிற லாபி. இவர்கள் தங்கள் பிரச்னையை நாட்டு பிரச்னையாக மாற்றிவிடுவார்கள்.  அமைப்பு சாரா தொழிலாளர்களை, அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

செலவு அதிகம். அமைப்பு சாரா தொழிலாளர் ஒருவரை, எந்த நேரத்திலும் வேலையை விட்டு நீக்குவது எளிது. ESI, BEF, வாரத்தில் ஐந்து நாட்கள்தான் வேலை, மருத்துவ விடுப்பு… போன்ற வசதிகளை நிரந்தர பணியாளருக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் செலவு அதிகமாகும்.
இதையெல்லாம் பல நிறுவனங்கள் விரும்புவதில்லை. அரசும் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். அதைத்தான் சீர்திருத்தம் என்று  சட்டங்கள் உடைக்கப்பட்டு வருகிறது. வேலை நேரமான 8 மணி நேரத்தை, 12 – 16 மணிகளாக மாறியுள்ளது.

இப்போது நகரத்திலிருந்து கிராமங்களுக்கு சென்றவர்களுக்கெல்லாம், ‘வேலை தர்றோம்… அப்ரண்டீசா இருங்க…’ என்கிறார்கள். எந்த ஊரிலும் அப்ரண்டீசாக இருப்பவர்கள் பர்மமெண்ட் ஆவதில்லை. அவருக்கு பதில் மற்றொரு அப்ரண்டீஸ்தான் உருவாக்கப்படுவார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *