உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியவர் பில்கேட்ஸா?

மூன்று வருடங்களுக்கு முன்பு, அதாவது 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலக சுகாதார அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் அறிவுஜீவியுமான பில்கேட்ஸ் உரையாற்றினார். 
‘‘இயற்கையின் விளைவாலோ அல்லது தீவிரவாதிகள் தாக்குதலாலோ ஒரு மோசமான ஆட்கொல்லி கொள்ளை நோய் மனித சமூகத்தை விரைவில் தாக்க உள்ளது. ஒரு வருடத்தில் சுமார் முப்பது லட்சம் மக்கள் இதனால் உயிரிழக்க நேரிடும். மேலும் பல கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள்.

இதைப் பற்றி நுண்கிருமியியல் அறிஞர்கள், மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பு சுமார் 10 முதல் பதினைந்து வருடங்கள்கூட நீடிக்கக்கூடும்…’’ என்ற அதிர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

அது ஒன்றும் ஆரோக்கியம் தொடர்பான மாநாடு அல்ல. பாதுகாப்பு மாநாடு. அணு ஆயுதங்கள் பற்றியோ, தட்பவெப்ப நிலை மாற்றங்கள் பற்றியோ பேசாமல், பில்கேட்ஸ் எப்படி கொள்ளை நோய் பற்றி பேசினார்? அவர் பேசிய மூன்றே வருடங்களில் சொல்லிவைத்தாற்போல் கொரோனா பூமிக்கு வந்துள்ளது. அப்படியானால், கொரோனா என்பதே ஒருவகை சதியா? இது முன்பே பில்கேட்ஸுக்குத் தெரியுமா? வேறு யார் யாருக்கெல்லாம் தெரியும்? யாரின் சதித்திட்டம் இது..?

இப்படி தத்தம் கற்பனை வளத்துக்கு ஏற்ப துப்பறியும் கதைகளை விஞ்சிய த்ரில்லர்களை எழுதத் தொடங்கிவிட்டன உலகப் பத்திரிகைகள்.
இது சீனாவின் சதி என்பதில் தொடங்கி, அமெரிக்காவின் சதி என்பது வரையான பல நூறு புலனாய்வுக் கட்டுரைகளுக்கு
இடையேயும் நமக்கு திரும்பத் திரும்ப தோன்றிக்கொண்டே இருக்கும் கேள்வி, பில்கேட்ஸுக்கு எப்படி முன்பே இது தெரிந்தது என்பதுதான்.
சிலர் கொரோனா தோன்றிய உடனேயே இந்தப் பழியை பில் கேட்ஸின் தலையிலேயே போட்டார்கள். கோவிட்’19 என்பதையே பில் கேட்ஸ்தான் உருவாக்கி பரப்பிவிட்டார் என்றார்கள்.
பில் கேட்ஸின் வாழ்வு இரண்டு பாகங்களை உடையது. முதல் பாகத்தில் மிகப்பெரும் கோடீஸ்வரராக டெக் உலகின் அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்கிய கேட்ஸ், இரண்டாம் பாகத்தில் உலக சமூகத்தின் உடல் நலம் சார்ந்த விஷயங்களுக்கு கோடி கோடியாக நன்கொடைகளை வாரி வழங்கும் பாரி வள்ளலாய் இருக்கிறார்.

‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பின் மூலம் உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை நிதியாகத் தந்து வருகிறார். மேலும், கொள்ளை நோய் ஆய்வுகளுக்கான PHICOR என்ற அமைப்பினருக்கு கணிப்பொறி சார்ந்த பங்களிப்புகள் செய்வதும் இவரது இந்த அமைப்புதான்.

இந்தப் பங்களிப்புகளுக்காக சர்வதேச அளவிலான நிபுணர்களோடு உரையாட நேர்ந்தபோதுதான் இப்படியான கொள்ளை நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதை, தான் முன்பே உணர்ந்ததாகவும்… ஆனால், உலகம் இன்னமும் இந்த இக்கட்டை எதிர்கொள்ள மனமின்றி இருக்கிறது என்றும் கூறினார்.
உண்மையில் பில் கேட்ஸ் இந்தக் கொள்ளை நோய் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை 2015ம் ஆண்டு முதலே சொல்லி வருகிறார். ஆனால், அப்போது எல்லாம் அவர் பேச்சை பொருட்படுத்தாமல் இன்று கொரோனா வந்ததும் பழியை அவர் மீதே திருப்புகின்றனர் என்கிறார்கள் கேட்ஸின் ஆதரவாளர்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு கொரோனா தொடங்கியதிலிருந்தே கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. கொரோனா விஷயத்தில் சீனாவுடன் சேர்ந்து இந்த அமைப்பு தங்களை வஞ்சித்துவிட்டதாகப் பேசிவருகிறார் டிரம்ப். மேலும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் நன்கொடை பங்கை நிறுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

பில்கேட்ஸ் ‘முன்பு எப்போதைவிடவும் இப்போதுதான் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடும் வேலை உள்ளது. இப்படி யான சூழலில் அவர்களை செயல்படாமல் முடக்குவது சரியல்ல’ என்று வருத்தப்படுகிறார்.உலக சுகாதார நிறுவனத்தின் மொத்த வருவாயில் சிறிய பகுதியை தானமாகத் தரும் சீனாவின் பேச்சைக் கேட்டு, பெரும் பங்கை தானமாகத் தரும் அமெரிக்காவை அது பகைக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற நிலையில், உலக சுகாதார நிறுவனம் இப்போது யாரின் கைப்பாவை என்ற கேள்வி எழுந்துள்ளது. சிலர் பில்கேட்ஸை கைகாட்டுகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு நாடுகள் மட்டும்தான் நிதியளிக்க முடியும் என்றில்லை. வசதி படைத்த கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் பெரும் நிதியைக்கூட அது மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொள்கிறது. போலியோ ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு போன்ற பணிகளுக்காக மட்டும் பில்கேட்ஸ் நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாய் ஆண்டு தோறும் பங்களித்து வருகிறது.

கடந்த 2019 டிசம்பர் காலாண்டின் நிலவரத்தின்படி உலக சுகாதார நிறுவனத்தின் மொத்த வருவாயில் 15.9% நிதியான ஆறாயிரத்து எழுநூறு கோடியை அமெரிக்காதான் வழங்கியது. இதற்கு அடுத்த நிலையில் 9.4% தொகையான நாலாயிரம் கோடியை பில்கேட்ஸின் நிறுவனம்தான் வழங்கியது. பில்கேட்ஸின் அமைப்புக்குப் பிறகுதான் இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளே பங்களிப்பு செய்திருக்கின்றன.

இப்படியான சூழலில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சீனா உலக சுகாதார நிறுவனத்தை ஆட்டிப்படைப்பதாகவும் சொல்கிறார்.

இந்தக் கூட்டில் சீனாவோடும் உலக சுகாதார நிறுவனத்தோடும் பில்கேட்ஸ் நிறுவனமும் இருக்கிறது என்பதுதான் உலகில் இப்போது வைரலான சதிக்கோட்பாடாகப் பேசப்படுகிறது.பில்கேட்ஸுக்கு இதில் பங்கில்லை என்றால் சீனாவில் உருவாகப் போகும் ஒரு கொள்ளை நோய் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்பே எப்படித் தெரியும் என்று கேட்கிறார்கள் சில அமெரிக்க அரசியல் நோக்கர்கள்.

பில்கேட்ஸோ இதற்கு எல்லாம் எந்த பதிலும் சொல்வதில்லை. ஆனால், அமெரிக்காவின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் முகேஷ் கபிலா, ‘‘உலக சுகாதார நிறுவனம் என்பது உலகின் பல்வேறு நாடுகள், அமைப்புகளும் நிதியளித்து நடத்தி வரும் ஒரு பொதுநல அமைப்பு. எல்லா நாடுகளின் பங்களிப்பும் இருக்கும் வரை அதன் இறையான்மை காக்கப்படும். அதன் நிஜமான நோக்கங்கள் காக்கப்படும்.

ஆனால், இப்படி யாரேனும் ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் கை அதில் ஓங்கினால், அந்த அமைப்பில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். பிறகு அவர்களை எதிர்த்து எதுவுமே கேட்க இயலாத சூழல் ஏற்பட்டுவிடும்…’’ என்று எச்சரிக்கிறார்.

இப்போதே பில்கேட்ஸ் நிறுவனம் நிதியளித்துவரும் நோய்களுக்கான நலத்திட்டங்களில் அந்நிறுவனத்தின் தலையீடு மற்றும் மேலாண்மை உள்ளதாகச் சொல்கிறார்கள். இது உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டைத் தடுப்பதாகவும், தன் நலன்களுக்காக அதை வளைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிஞர்கள் அஞ்சுகிறார்கள்.

சென்ற டிசம்பர் வரை உலகின் அறிவுஜீவியாகவும், ஏழைப் பங்களானாகவும், மருத்துவத்துக்கு கோடி கோடியாக வாரி வழங்கும் வள்ளலாகவும் பார்க்கப்பட்ட கேட்ஸ், கடந்த நான்கைந்து மாதங்களாக உலக மெடிக்கல் மாஃபியாக்களின் தலைவன் ரேஞ்சுக்கு மீடியாக்களால் சித்தரிக்கப்படுகிறார்.

இதில் எது உண்மை, எது பொய் என்று நம்மால்தான் சரியாகச் சொல்ல இயலவில்லை. மனித உயிர்களை அத்தனை எளிதாக நினைக்கும் மனங்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. பில் கேட்ஸ், அவர்களில் ஒருவராக இருக்கக்கூடாது என்று நம்புவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *