உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட 4200 கோடி ரூபா
நிதிக்கு என்ன நேர்ந்தது ?

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டுக்கு போதியளவு நிதி கிடைத்திருந்தும் அரசாங்கம் அதனை மக்களுக்கு தேவையான விதத்தில் பயன்படுத்தவில்லை என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக்கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 200 மில்லியன் டொலர் நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. எமது நாட்டின் பெறுமதியில் அது 4200 கோடி ரூபா.
இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என சுகாதார அமைச்சரிடம் நான் கேட்க விரும்புகின்றேன். தயவுசெய்து அது தொடர்பாக தரவுகளை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுத்து செல்லும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன.

நாட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நாம் கோரிக்கை விடுதிருந்தோம். இதனை நாங்கள் நாட்டு மக்களுக்காகவே முன்னெடுக்குமாறு கோரியிருந்தோம். ஆனால் அதற்கான நிதி போதியளவில் இருந்தும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.

20 மில்லியன் முககவசங்கள் நாட்டுக்கு கொண்டுவந்திருக்க முடியும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் அதனை பகிர்ந்தளித்திருக்க முடியும். ஒருநாளைக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை முன்னெடுக்க இயந்திரங்களை கொண்டுவந்திருக்க முடியும்.
கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம்களை மேலும் வசதிமிக்கதாக அமைத்திருக்க முடியும். சுகாதாரத்துறை மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொடுத்திருக்க முடியும் .

அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாததன் காரணமாகவே கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவ்வாறு எந்தவோரு பயனுள்ள விடயத்தையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்க வில்லை” என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *