கல்லூரிப் படிக்கும் வரை காலில் செருப்பில்லை…!
                   

“வறட்சியும் பஞ்சமும் நிறையப் பேரை சொந்த ஊரை விட்டு விரட்டி இருக்கு… அப்படி தென்பகுதியில் இருந்து மதுரைக்குப் பிழைக்க வந்த குடும்பம் எங்களுடையது.
எங்க அய்யாவும் அம்மாவும் இங்கே இருந்த ஹார்வி மில்லில் தினக்கூலிகளாக இருந்தாங்க. வீட்டில் மின்சார விளக்கு கூட இல்லாம லாந்தர் விளக்கில் தான் நான் பள்ளிப் படிப்புப் படிச்சேன்யா.

பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்பவே, பேசுவேன்; பாடுவேன்; ‘லந்தா’ பேசிக் காட்டுவேன்; படம் வரைவேன்.
இதற்கிடையில் சுமாரா படிப்பேன். பள்ளிப் படிப்பை முடிச்சதும் வீட்டில் என்னை வேலைக்குப் போகச் சொல்லிட்டாக.
நான் எப்படியாவது அமெரிக்கன் கல்லூரியில் சேரணும்னு பிடிவாதமா நிக்கிறேன். அப்போ என் மேல பிரியமா இருந்த ஏ.எம்.எஸ் வாத்தியார் தான் என்னைக் கூப்பிட்டு போய் விண்ணப்பம் வாங்கிச் சேர்த்தார்.
ஆனா அப்போ கல்லூரியில் சேர 180 ரூபாய் ஃபீஸ் கட்டணும். வீட்டில் அந்தப் பணத்தைக் கட்டுறதற்கு வழியில்லை. என்ன செய்யறது? தவிச்சுப் போயிட்டேன்.
அப்ப சொந்தக்கார பொண்ணு தன்னோட நகைகளை அடகு வைச்சுக் கொடுத்த பணத்தை ஒரு வழியா கல்லூரியில் கட்டிச் சேர்ந்தேன்.
மத்த மாணவர்கள் மாதிரி ‘பேண்ட்’ போட்டுட்டெல்லாம் நான் கல்லூரிக்குப் போகல… வேட்டிதான்…

கிருஷ்ணபாளையம்கிற ஏரியாவில தான் நாங்க குடியிருந்தோம். அங்க இருந்து கல்லூரி நாலு மைல் தூரம் இருக்கும். வெயிலில் நடந்து தான் நானும் ஒரு நண்பனுமா கல்லூரிக்குப் போவோம்.
அப்போ ஒல்லியா இருப்பேன். காலில் செருப்புப் போட்டிருக்க மாட்டேன். வீட்டிலே அதை வாங்கி கொடுக்க வசதியில்லே.

கல்லூரின்னா அப்படி ஒரு கல்லூரி. மரங்களும் அதுவுமா பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். மொத்தத்தில் 39 ஏக்கரில் விசாலமா இருக்கும்.
1881-ல் ஜம்ரோங்கிறவரால் தொடங்கப்பட்டது இந்தக் கல்லூரி.
கல்லூரிக்குள் நுழையும்போது பரவசமாக இருக்கும். இப்போ பையன்களுக்குக் கொடுக்கிற மாதிரி  ‘பாக்கெட்’ மணி சமாச்சாரம் எல்லாம் எனக்குக் கிடையாது.
கையில் ஒத்த காசு இருக்காது. அதெல்லாம் அப்போ எங்களுக்குப் பெரிசா தெரியலை. படிக்கணும்கிறது மட்டும்தான் தெரிஞ்சது… இப்போ படிக்கிறவங்களுக்கு என்னடா இப்படியான்னு தோணும். ஆனா அதையெல்லாம் கடந்து தான் நாங்க படிச்சோம்.
கல்லூரியில் நான் பி.ஏ., படிச்சேன். சௌரிராயன்ங்கிறவரு அப்போ கல்லூரி முதல்வர். ரொம்ப நல்ல மனுஷர். பார்க்க கம்பீரமா அப்படி ஒரு தோற்றம்.

கிறிஸ்தவர்களால் தொடங்கப்பட்டாலும் மாணவர்களைச் சேர்க்கிறதில் மத பேதம் பார்க்க மாட்டாங்க.
எத்தனையோ தலைவர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்பவே எனக்குத் தமிழில் ஈடுபாடு. கல்லூரியில் இருந்த திருவள்ளுவர் கழகத்திற்கு நான்தான் தலைவரா இருந்தேன்.

அப்போ கூட்டங்களில் பேசுறப்போ கல்லூரி முதல்வரிலிருந்து பல பேர் முன்னாடி உட்கார்ந்து கேப்பாங்க. என் பேச்சுக்கு துவக்கம் அதுதான்.
அப்போ குன்றக்குடி அடிகளார், நெடுஞ்செழியன் போன்ற பலரைப் பேச கூப்பிட்டு வந்திருக்காங்க. சிலசமயம் முக்கியமான கூட்டத்தில் யாரும் பேச வர்றதுக்கு முன்னாடி என்னைப் பாடச் சொல்லுவாங்க…
பி.யு.சின்னப்பா பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் உச்ச ஸ்தாயியில் பாடுவேன். கூட்டம் கலையாமல் கேட்டுக்கொண்டிருக்கும்.

கல்லூரியில் நாடகங்களும் போட்டிருக்கோம். நானும் அதில் நடிப்பேன். தமிழ்நாட்டில் புயல் அடிச்சப்போ அதுக்கான நிவாரண நிதிக்காக கல்லூரியில் ஒரு நாடகம் போட்டு நிதி வசூல் பண்ணினது நினைவில் இருக்கு.
வீட்டிலிருந்து தூக்கு வாளியில் தான் மதியத்திற்கு ஏதாவது உணவு எடுத்துட்டுப் போவேன்.

கல்லூரியில் இருந்த ஆங்கிலமும் தோரணையும் முதலில் மிரள வைச்சது. பிறகு போகப்போக பழகிருச்சு.

ஆரம்பத்தில் என் கிட்டே என்னைப் பத்தி ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. அதுக்கு என்னோட குடும்பச் சூழ்நிலையும் ஒரு காரணம்.
முதல் தலைமுறையா வர்ற குடும்பத்துக்கே உரித்தான உணர்வு அது. வேறு எதையும் மறைக்கலாம், ஏழ்மையை மறைக்க முடியுமா? அதுதான் என்னுடைய தோற்றத்திலும் பிரதிபலிச்சது.
அப்ப எனக்குக் கிடைச்ச நண்பர்கள் இருக்காங்களே தங்கம்ன்னா அப்படித் தங்கம்… பரந்த மனசு. எனக்கு ஒரு பிரச்சனைன்னா பதறிப்போய் உதவி பண்ணுவாங்க…
பட்டினினியா இருக்கும்போது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்காங்க. மனுசங்க வடிவத்தில் வந்த தெய்வம் மாதிரி எனக்கு உதவி இருக்காங்க. தியாகராஜன், வாசுதேவன், அருணாசலம்னு பல நண்பர்கள்… அவங்க காட்டின அன்புக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லை தம்பி!

என்னுடைய படிப்புச் செலவுக்காக நகையை அடமானம் வைச்சுப் பணத்தைக் கொடுத்தவன் அருணாசலம். தன்னுடைய சைக்கிளை வித்துப் பணம் கட்டியவன் தியாகராஜன்… அவன் ஞாபகமாகத் தான் என் பையனுக்கு ‘தியாகமூர்த்தி’ன்னு பெயரை வைச்சேன்.
சொந்தக்காரங்க தயங்கின நேரத்தில் அவ்வளவு பிரியம் காட்டின அந்த நண்பர்கள் இன்னைக்கு இல்லை… காலமாயிட்டாங்க ஆனா அவங்களை நான் நினைக்கலைன்னா நான் மனுசனே இல்லை!”

சொல்லும்போதே கண் கலங்குகிறது பாப்பையாவுக்கு. முக இறுக்கம் கலைந்து இயல்பான புன்னகைக்குத் திரும்பவும் மாறுகிறார்.

“அதெல்லாம் சரி கல்லூரியில் குசும்பு பண்ணுவீங்களா? கலாட்டா பண்ணுவீங்களான்னு நீங்க கேட்கலாம்.
வசதியுள்ள பிள்ளைங்க அப்படிப் பண்ணலாம். அவங்களுக்குக் கவலையில்லை. ஆனா எவ்வளவோ கஷ்டத்துக்கு இடையில் முக்கித் தக்கிப் படிக்க வந்த ஆளுக கலாட்டா பண்ண முடியுமா? நீங்களே சொல்லுங்க. அதை உணர்ந்தாலே எந்த வகுப்பையும் ‘மிஸ்’ பண்ண மாட்டேன்.
அப்படி இருந்தும் குடும்பப் பிரச்சனைகளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாம பி.ஏ., இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் ஃபெயிலாயிட்டேன். மறு வருடத்தில் எழுதித் தேர்வானேன். எம்.ஏ., தியாகராஜர் கல்லூரியில் படிச்சேன்.
எங்க ஐயாவுக்கு மேல் படிப்பு படிப்பதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. “வேலையில் சேரப்பாருய்யா”ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அதற்கிடையில் செங்கல்பட்டில் ஒரு கிளார்க் வேலை கிடைச்சு ஆர்டரும் வந்துருச்சு.

பலர் அதில் சேர வற்புறுத்தினாங்க. நான் துணிஞ்சு முடிவெடுத்து எம்.ஏ., படிக்கப் போயிட்டேன்.
எம்.ஏ., படிக்கப் போனப்போ தான் முதலில் எங்கய்யா ஒரு பேண்ட் எடுத்துக் கொடுத்தார். அதுவரை வேட்டிதான்.
ஒரு சைக்கிள் வாங்கினேன். அதில் கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனா எந்த ஒரு வசதிக்காகவும் ஏங்கினதில்ல. இருக்கிறதை வைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கப் பழகிட்டேன்.

எம்.ஏ.,வில் சேர்ந்தா டாக்டர்.இராசமாணிக்கனார், அவ்வை துரைசாமி, இலக்குவனார்ன்னு அருமையான தமிழாசிரியர்கள். அவங்க கிட்டே என்ன மாதிரியான தமிழ்ப்பற்று!
அவங்ககிட்டே மாணவரா இருந்தது பெரிய விஷயம். ஒரு வழியா முடிச்சுட்டு மதுரையில் இருந்த ஒரு டுடோரியல் கல்லூரியில் 150 ரூபாய் சம்பளத்தில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்.
பிறகு ஊரிஸ் கல்லூரியில் ஒரு வருஷம் வேலை பார்த்துட்டு, திரும்பவும் நான் படிச்ச அமெரிக்கன் கல்லூரிக்கே ஆசிரியரா வந்து சேர்ந்தப்போ நிம்மதியா இருந்தது.

நான் மாணவனா இருந்த அதே கல்லூரியில் ஆசிரியராக வந்தப்போ, படிக்க வரும் மாணவர்களிடம் கொஞ்சமாவது ‘டிசிப்லினா’ இருக்கணும்னு நினைச்சேன்.
அதனால வகுப்புக்கு தாமதமாக வர மாணவர்களுக்கு 10 பைசா ஃபைன் போடுவேன். பிறகு அதைச் சேர்த்து மாணவருக்கு செலவழிப்பேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்தவர், தன்னுடைய பட்டிமன்றத்தைப் பற்றிச் சொன்னார்.

“61 வாக்கில் தான் முதலில் பட்டிமன்றத்துக்குப் போக ஆரம்பிச்சேன். முதல் பட்டிமன்றம் கலை இலக்கியப் பெருமன்றத்தில் நடந்துச்சு.
அப்போ என்னுடைய பேச்சில் கூடுதலான வேகம் இருக்கும். உரைநடைத் தமிழில் உணர்ச்சியோட பேசுவேன். அதில் பேசி முடிச்சுட்டு இறங்கினப்போ புன்சிரிப்போட வாழ்த்தினார் பேச்சின் ஆசானான ஜீவா.

தொடர்ந்து பட்டிமன்றத்துக்குப் போக ஆரம்பிச்சேன். கல்லூரி நிர்வாகமும் அனுமதிச்சது. அதோட நிழலில் நான் வளர ஆரம்பிச்சேன். உரைநடைத் தமிழில் பேசிக்கிட்டிருந்ததை மாற்றி பேச்சுத் தமிழுக்கு வந்தேன்.
மக்களுடைய மொழியில் கனமான விஷயங்களைப் பேசினப்ப ஆதரவு இருந்துச்சு. அதை மதிச்சாங்க…

தமிழகம் முழுக்க பட்டிமன்றம் போய், கடல் கடந்தும் போக ஆரம்பிச்சோம். தொலைக்காட்சி வந்ததும் எத்தனையோ மாற்றங்கள்…”  என்றவர், தொடர்ந்து கல்லூரியில் தனக்குப் பரிச்சயமான ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

“நூற்றாண்டைத் தாண்டிய அந்தக் கல்லூரி தான் என்னை சமூகத்தில் ஒரு ஆளா நிமிர வைச்சிருக்கு… வெளியே முகம் தெரிய வைச்சிருக்கு…
இந்தக் கல்லூரி மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நீங்க பார்க்கிற பாப்பையாங்கிற மனுஷன் இல்லையய்யா… இது உண்மைய்யா…” திரும்பவும் நெகிழ்கிறார் ‘பேச்சுக்கு ஒரு பாப்பையா’ என்று திரைப்படப் பாடல் வருமளவுக்கு உயரம் தொட்டிருக்கிற சாலமன் பாப்பையா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *