மெளலானா யாகுப் ஹாசனின் நினைவாக வைத்த பெயர் தான் கமல்ஹாசன்

“சிலருக்கு ‘அரண்மனை யோகம்’ என்பார்கள் கமலுக்கு நிஜமாகவே அரண்மனை யோகம்.
அவர் பிறந்தது ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனையில்.
சுதந்திரப் போராட்டத் தியாகியான வழக்கறிஞர் சீனிவாசன் மனைவியுடன் பிரசவம் பார்க்க ராமநாதபுரம் போவதற்குள் வலி.

உடனே நண்பரான ராமநாதபுரம் மன்னரின் அரண்மனைக்குப் போனதும் அங்கே பிறந்தவர் கமலஹாசன்.
பிறந்தது 1954 நவம்பர் 7-ம் தேதி. தந்தை சீனிவாசன் தன்னுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரான மௌலானா யாகுப் ஹாசனின் நினைவாக தன் குழந்தைகளின் பெயர்களிலும் ‘ஹாசனை’ச்  சேர்த்தார்.
பரமக்குடியில் இருந்த கமலின் வீட்டிலேயே பாட்டுக் கச்சேரிகள் நடக்கும். நடன நிகழ்ச்சிகள் நடக்கும். கமலின் படிப்பு துவங்கியது இங்குள்ள எளிமையான பள்ளியில்.
எழுத்தறிவித்த நினைவாக வளர்ந்த பிறகு அந்தப் பள்ளியை புதுப்பித்து உயிரூட்டிருக்கிறார் கமல்.

பசுமையான பரமக்குடி நாற்றாக அம்மாவுடன் சென்னைக்கு வந்தார் கமல். திருவல்லிக்கேணி ஹிண்டு உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து படிப்பு.
மகன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்பது அப்பா சீனிவாசனின் கனவு. ஆனால் கமலின் கனவோ வேறு திசையில்.

குடும்ப நண்பருடன் ஏ.வி.எம். செட்டியார் வீட்டிற்கு போனபோது படத்தில் நடிக்கத் துறுதுறுப்பான பையனைத் தேடிக்கொண்டிருந்த மெய்யப்பச் செட்டியாருக்கு கமலின் துடிப்பான முகமும் பேச்சும் பிடித்துவிட்டது.
‘களத்தூர் கண்ணம்மா’ வில் குட்டி நட்சத்திரமா அறிமுகம். முதல் படத்திலேயே பாட்டு. ஜனாதிபதி விருது கிடைத்தது.
ஜெமினியை அடுத்து சிவாஜியுடன் ‘பார்த்தால் பசிதீரும்’ எம்.ஜி.ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்று சில பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக.  அதன்பிறகு சினிமாவுடன் ஒரு இடைவேளை.

பள்ளியில் படித்தபோது டி.கே.சண்முகம் நாடகக் குழுவுடன் தொடர்பு. கமலின் உச்சரிப்பும் முகபாவமும் கவர அவருடைய நாடகங்களில் கமல்தான் ஹீரோ. அதுவே குருகுலமானது.
நடிப்புக்கும் நாட்டியத்திற்கும் பயிற்சி நடந்தது. கமல் நடித்த ‘அப்பாவின் ஆசை’ நாடகம் நூறு தடவைக்கு மேல் மேடையேறியது.
அதற்குள் படிப்பின்மீது ஈடுபாடு குறைந்துபோனது. பரதம், கதக், கதகளி என்று பலவற்றையும் கற்றுக் கொண்டார். மயிலாப்பூரில் கமலின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்த தங்கப்பனிடம் உதவியாளராகச் சேர்ந்து சில படங்களில் பணியாற்றினார்.
தங்கப்பன் தயாரித்து  1971-ல் வெளிவந்த ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் கமல் துணை இயக்குநர். திரும்பவும் ஜெமினியுடன் தொடர்பு. ‘குறத்தி மகன்’ படத்தில் சிறு வேடம்.
ஜெமினி மூலம் பாலச்சந்தர் அறிமுகமானதும் கோடம்பாக்கத்துக்குள் ஒரு பாதை துவங்கிவிட்டது.

1973-ல் ‘அரங்கேற்றம்’  படத்தில் சிறு வேடம். அடுத்து ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’-க்கு பிறகு கவனிக்கப்பட்டாா் கமல்.
சினிமாவின் பிரம்மாண்டத்தில் தன் முகத்தைப் பதியவைக்கச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

1977-ல் வெளிவந்த பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம் கமலின் முகத்தைக் கோடம்பாக்க வெளிச்சத்திற்கு இடையில் தனித்துக் காட்டியது.

நட்சத்திரமானார் கமல்.

கமலே ஒரு கூட்டத்தில் சொன்னபடி “இந்த இடத்திற்கு நான் வந்தது மக்களின் அன்பினால், அதை அடைய நான் பட்ட கஷ்டம் மிகப்பெரியது”.
நிஜமாகவே கமல் வளர்ந்து நிற்கிற இடம் கண்ணுக்கு தெரிகிறது.
அந்த இடத்திற்கு வருவதற்கு அவர் காட்டிய முழுமையான ஈடுபாடும் தீவிர உழைப்பும் பலருக்கு தெரியாவிட்டாலும் அவருடைய வளர்ச்சிக்கு அடிப்படை அதுதான்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *