கொரோனாவால் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் தமிழ் சினிமா

சினிமாவின் ஆரம்ப காலத்தில், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே சாதனமாக விளங்கியது தியேட்டர்கள் தான்.
90-களில் தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தபோது, தியேட்டர்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என ஆரூடம் கூறினார்கள்.
அதனைப் பொய்யாக்கி ‘மால்கள்’ ‘மல்டி பிளக்ஸ்’ என பரிணாம வளர்ச்சி பெற்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது, திரை அரங்குகள்.
இந்த நிலையில்தான், ஓ.டி.டி. எனப்படும் இணையதளங்கள் திரையரங்குகளை ஆட்டம் காண வைத்துள்ளன.
ஊரடங்கு காலத்துக்கு முன்பு இந்த இணையதளங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
“ஓ.டி.டி.க்கு தயாரிப்பாளர்கள் படம் கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகி மூன்று மாதங்களுக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வெளியிட அனுமதிக்க வேண்டும்’’ என்று திரை அரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் வலியுறுத்தினர்.
அதனை தயாரிப்பாளர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதால், அதனை தங்களுக்குச் சாதகமாக்கி கொண்டன, ஓ.டி.டி.தளங்கள்.
ஊரடங்கின் ஆரம்பத்தின், விற்பனை ஆகாமல் தூங்கி கொண்டிருந்த சின்ன பட்ஜெட் படங்களைப் பெரிய விலை கொடுத்து வாங்கிய இணைய தளங்கள், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழலில் பெரிய பட்ஜெட் படங்களையும் வாங்க முற்பட்டுள்ளன.
ஹாலிவுட்டில் தொடங்கிய இந்தப் புதிய வணிகம், தமிழ் திரை உலகிலும் வியாபித்து, தியேட்டர்களை ‘காணாமல்’ போகச்செய்யும் ஆயத்தங்களைத் தொடங்கி விட்டது.
பெரிய பட்ஜெட்டில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வாங்கிய ‘அமேசான் பிரைம்’ இணைய தளம், இன்னும் சில பெரிய படங்களுக்கு வலை விரித்துள்ளது.
இன்னும் யார்? யார்? ஓ.டி.டி. தளத்தின் வலையில் விழுவார்கள் என கணிக்க முடியாத நிலையில், ‘தற்காப்பு’ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தியேட்டர்கள் தரப்பு.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம்.
அவர் உருவாக்கி கொடுத்தத் திட்டத்தை ஆமோதித்தார், தயாரிப்பாளர் ‘பிரமிட்’ நடராஜன்.

என்ன திட்டம்?

“தியேட்டர்களில் மட்டுமே திரையிடுவதற்கு என்று பிரத்யேகமாக படங்களைத் தயாரித்தல்’’ அதாவது, OFT (ONLY FOR THEATERS) திட்டம்.
இது தொடர்பாக இருவரும் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேசினர்.

தங்கள் திட்டத்தை விவரித்தனர்.

இந்த நவீன தயாரிப்பு திட்டத்தை முன்னெடுத்து செல்ல முழு மனதுடன் சம்மதம் சொன்னார் சவுத்ரி.
விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், எழில், பேரரசு, பாலசேகரன் போன்ற இரண்டு டஜன் இயக்குநர்களை, தனது ‘சூப்பர் குட்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்தவர் சவுத்ரி.
தங்களது ஓ.எஃப்.டி. (OFT) திட்டம் குறித்து டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் எடுத்துரைத்தார் ஆர்.பி.சவுத்ரி.
ஓ.எப்.டி. திட்டத்தின் முதல் படத்தை இயக்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.

மளமளவென காரியங்கள் நிகழ்ந்தேறின.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
விஜய் சேதுபதியும் பார்த்திபனும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள். 25 நாட்களில் படத்தை முடித்து தருவதாக உறுதி அளித்துள்ளார் ரவிக்குமார்.
ஷூட்டிங் ஆரம்பித்த 60 நாட்களில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் சில ‘ஸ்பெஷல்’ அம்சங்கள்.

படத்தின் பட்ஜெட்- 2 கோடி.

200 பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு படம் தயாரிக்கப்படும்.
அதிகபட்சம் ஒரு தயாரிப்பாளருக்கு 10 பங்குகள் விற்பனை செய்யப்படும்.
திரை உலகில் உள்ளவர்களுக்கு மட்டுமே பங்குகள், விற்பனை செய்யப்படும்.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இப்போது சம்பளம் கிடையாது.
லாபத்தில் அதாவது விற்பனையில் அவர்களுக்கு, பங்கு (சம்பளம்), கொடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மூவர் கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *