நீதிமன்றம் பாராளுமன்றத்தை கூட்டுமாறு உத்தரவிட முடியாது

உயர்நீதிமன்றத்தில் எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பையும் சவாலுக்குட்படுத்தியே எதிரணிகளினால் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு வர்த்தமானி அறிவிப்புகளும் செல்லுபடியற்றவை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை மீண்டும் ஜனாதிபதி கலைப்பார். அத்துடன் தேர்தலுக்கான புதிய திகதியும் அறிவிக்கப்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு மட்டும் செல்லுபடியற்றது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அறிவிக்கும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எப்படியாக வந்தாலும் அவை எமக்குச் சவாலாக அமையாது.

இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உண்டு. எனவே, இவ்விடயத்தில் எந்தத் தரப்பும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.
நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்படட பழைய நாடாளுமன்றத்தை எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி மீளக்கூட்ட மாட்டார்” – என்றார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *