ஒரே நாளில் ஒரு இலட்சம் பேரை தாக்கிய கொரோனா வைரஸ்

உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. 2ஆவது அலை தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

ஊரடங்கு, வீட்டுக்குள் பொதுமக்கள் முடக்கம், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சானிடைசர் திரவம் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவது குறையாமல், உலகமே கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகமெங்கும் 51 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. 3 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றிருக்கிறது. இது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் 1 லட்சத்து ஆயிரத்து 400 இற்கும் மேற்பட்டோருக்கு தாக்கி இருப்பது பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

தொடர்ந்து உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ரஷியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அணி வகுத்து நிற்கின்றன.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என்று எச்சரித்தார். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறி வைத்து தாக்குவது பற்றி அவர் கவலையும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் ‘ரோசியா 24’ வானொலிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2-வது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *